பதிவு செய்த நாள்
15
செப்
2015
11:09
கோபி: கோபி பவளமலை முருகன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில் ஆகிய மூன்று கோவில்களில், இன்று முதல் அன்னதான திட்டம் துவங்குகிறது. கோபி தாலுகாவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அமரபணீஸ்வரர் கோவில், ஆதிநாராயணர் கோவில், பவளமலை முத்துகுமாரசாமி கோவில், பச்சமலை முருகன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில்கள் பிரசித்தி பெற்ற கோவில்களாக உள்ளன. இக்கோவில்களில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், கடந்த, 2002 ஆக., 15 முதல் அன்னதான திட்டம் செயல்படுகிறது. இக்கோவிலில் உள்ள அன்னதான உண்டியல் வருவாய் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தினமும், மதியம், 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இத்திட்டம், இக்கோவிலில் துவங்கியது முதல், கடந்த ஆக., 31ம் தேதி வரை, 3.90 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பச்சமலை முருகன் கோவில் மற்றும் சாரதா மாரியம்மன் கோவில்களில், ஏற்கனவே அன்னதான திட்டம் அமலில் உள்ளது. பொதுவாக அன்னதான திட்டம் நடைமுறையில் இருக்கும் கோவில்களில், ஓரளவுக்கு பக்தர்கள் கூட்டம் மிகுதியாக இருப்பதால், பிற வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. இதனால், இம்மூன்று கோவில்களிலும் பக்தர்கள் கூட்டத்தால், கோவில் வருவாய் கணிசமாக உள்ளது. ஆனால், கோபியில் பிரசித்தி பெற்ற கோவில்களான, பவளமலை முருகன் கோவில் மற்றும் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில்களில் அன்னதான திட்டம் துவக்கப்படாமலேயே இருந்தது. கோவில் வருவாயை பெருக்க, அன்னதான திட்டத்தை துவக்க, அறநிலையத்துறை அதிகாரிகள், தமிழக அரசுக்கு சமீபத்தில் கருத்துரு அனுப்பினர். இதுபற்றி, கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் கூறுகையில், கோபி பவளமலை, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில்களில், இன்று முதல் அன்னதான திட்டத்தை துவக்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இம்மூன்று கோவில்களிலும், இன்று மதியம், 12 மணிக்கு தலா, 25 பேருக்கு அன்னதான திட்டத்தை, தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ளார் என்றார்.