பதிவு செய்த நாள்
28
செப்
2015
11:09
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாளநத்தத்தில், மழைவேண்டி பெண்கள் நள்ளிரவில் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில், போதிய மழை இல்லாததால், தக்காளி, கரும்பு மற்றும் கத்தரி உள்ளிட்ட அத்தியாவசிய விவசாய பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வந்தன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாளநத்தம் கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர் எல்லையான தண்டு மாரியம்மன் கோவில் மண்டில், நள்ளிரவு, 11மணி முதல், 12 மணி வரை, மழை வேண்டி, ஒப்பாரி வைத்து, அழுது நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனால், கட்டாயம் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், நள்ளிரவு ஒப்பாரி முடித்து பெண்கள் வீடு திரும்பினர். இதே போல், கடந்த சில தினங்களுக்கு முன் தர்மபுரி அடுத்த எட்டிமரத்துப்பட்டி கிராமத்தில், மழை வேண்டி அப்பகுதிமக்கள் களி சமைத்து சிறப்பு பூஜைகள் செய்து அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.