பதிவு செய்த நாள்
30
செப்
2015
12:09
மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில், 4000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளர் சாந்தலிங்கம் வழிகாட்டுதல்படி, ஆய்வாளர்கள் உதயகுமார், பாண்டீஸ்வரன் ஓவியங்களை கண்டறிந்துள்ளனர். முருகமலை பகுதியில் 100 அடி உயரத்தில், இயற்கையாக அமைந்த குகையின் முகப்பில் இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.ஆய்வாளர்கள் கூறியதாவது: வழக்கமாக வெள்ளை, காவி நிறங்களில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். இந்த ஓவியங்கள் முற்றிலும் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. மனிதர்கள் குழு நடனம் ஆடுவது போலவும், ஒரு விலங்கின் மீது அமர்ந்து போர் புரிவது போலவும் வரையப்பட்டுள்ளன. ஒரு வட்டத்திற்குள் ஒரு மனித உருவம் தீட்டப்பட்டுள்ளது.இத்தகைய பாறை ஓவியங்கள் பாண்டிய நாட்டில், கருங்காலக்குடி, கிடாரிப்பட்டி, சிறுமலை, தாண்டிக்குடி, பழநி மலை, காமயகவுண்டன்பட்டி, மாங்குளம் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. பெரியகுளம் மலைப்பகுதியில் முதன்முதலாக இவ்வகை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது, என்றனர்.