பதிவு செய்த நாள்
09
அக்
2015
03:10
நம்மில் பலர் தமக்கு நல்ல குரு அமையவில்லையே என்று மிகவும் வருத்தப்படுவார்கள். அவர்கள் பட்டியல் நீட்டுதலைப் பார்த்தால், அவர்களின் அவல நிலைக்கு குரு தான் காரணம் போலத் தோன்றும். உண்மையில் நாம் நல்ல சிஷ்யனாக இருந்தால், நமக்கு உரிய குரு, தானே வந்து நமக்கு அருள்புரிவார். சிலருக்கு இக்கருத்து புதியனவாகவோ அன்றி புதிராகக் கூடத் தோன்றலாம். ஆனால், உண்மையிதுதான்.
நமது மகாஷயர் ஷ்யாமா சரண் சுக்லா அவர்களை பாபாஜி எவ்விதம் ஆட்கொண்டு அருள்பாலித்தார். பாபாஜி, தானே வந்து மகாஷயரை, ஆட்கொண்ட பொழுது மகாஷயர், ஓர் அரசாங்க அதிகாரி, ஒருநாள் மகாஷயர் ஆயுதங்களுடன் அலுவலகப் பணத்துடன் வேலைக்காரர்கள் குழு சூழ, மலையின் ஜன சஞ்சாரமில்லாத சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது. இவர் பெயரைக் கூறிக் கொண்டே ஒரு கம்பீரமான சன்யாசி இவர் செல்லும் பாதையில் வந்து இவர்க்கு முன் வந்தார். சன்யாசியின் கம்பீரத்திலும் சாந்தமயமான முக வசீகரத்திலும் ஆட்பட்டார். எனினும் மகாஷயர் ஷ்யாமா சரணிற்கு உள்ளதே ஐயம். சன்யாசியை நோக்கி ஸ்வாமி தாங்கள் யார், தங்களை இதற்கு முன் சந்தித்ததே இல்லையே என்ற பொழுது, சன்யாசி உருவில் வந்த பாபாஜி ஷ்யாம் சரண், அஞ்சாதே உனக்கும் எனக்கும் பூர்வ ஜன்மத் தொடர்புண்டு எனச் சொல்லி உண்மைகளை சான்றுகளுடன் விளக்கி, தனது சீடனாக அரவணைத்த கிரியா யோகத்தை இல்லறத்தாருக்கு உபதேசித்து அவர்களை மேன்மைப்படுத்த வேண்டும்... எனக் கட்டளையிட்டு அருள்பாலிக்க வில்லையா?
அவ்வளவேன் சுந்தர மூர்த்தி நாயனாரை, அவரின் திருமணக் காலத்தே வந்து, சிவபெருமான் பழநாள் ஓலையைச் சான்றாகக் காட்டி, சுந்தரர் தன் அடிமை என்று வாதித்த தன் அருட் தொண்டில் இணைத்துக் கொள்ளவில்லையா பித்தா... என இகழ்ந்ததைக் கூட சினக்காது மகிழ்ந்து சுந்தரத் தமிழ் கொண்டு என்னைப் பாடு. எனக் கேட்கவில்லையா.. அது மட்டுமல்ல சுந்தரர் மொழிந்த வசவுகளை வாழ்த்தாக ஏற்றுக் கொண்டாரே.. இதே போலத்தான் நமது மகாஷயரும் தானே வலியச் சென்று அல்லது விரும்பித் தன்பால் சிலரை அழைத்து உபதேசம் செய்துள்ளார். யார் யாருக்கு என நீங்கள் ஆர்வமுடன் கேட்டதும் என மனக்கண்முன் விரிகிறது. இதோ சொல்லுகிறேன்.. வங்காள தேசத்தில் பாகிரதி நதிக்கரையில் ஒரு சிறு கிராமம். அங்கு செங்கல் சூளையில் அடிமட்டத் தொழிலாளியாகப் பணிபுரிந்தவர் ஹிதலால் சர்கார். அவர் அடிமட்டத் தொழிலாளி தான் ஆனால் ஆண்டவன்பால் மாறா பக்தி கொண்டவர். தாம் வழிகளில் தளராது பயணிப்பவர் அவர் தான் ஈட்டிய குறைந்தபட்ச கூலியைக் கொண்டு தன் குடும்பத்தையும். தன்னால் முடிந்தவரை தான தர்மமும் செய்து வந்தார். அவர் மனது எப்பொழுதும் ஆன்மிகத்திலேயே நாட்டம் கொண்டிருந்தது. கங்கை நதிக்கரையருகில் சென்று கால நேரம் போவது அறியாமல் அமர்ந்திருப்பார். அவர் உள்ளம் உண்மையிலேயே ஏங்கியது. இப்படிப்பட்ட உயர்ந்த ஆன்மாக்களுக்கு தான்... குருவே தானே வந்து அருள்செய்வார்.
வழக்கம்போல, ஒருநாள் தன் பணிகளை கவனமுடனும் கருத்துடனும் கருத்தாக செய்து கொண்டிருந்தபொழுது வார்த்தைகளினால் விவரிக்க இயலாத சஞ்சலம், அவர் உள்ளத்திலே அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. அவருக்கு ஒரே குழப்பம். என்ன செய்வது என்றே ஹிதலாலிற்கு புரியவில்லை. இது இயல்புதான். குழப்பம் சிந்தனையில் கொலு வேறும் என்றால், அங்கு சிந்தனைகள் சன்யாசம் சென்று விடும். இதே நிலைதான் ஹிதலாலுக்கும் ஏற்பட்டது. கால் போன போக்கில் செல்ல ஆரம்பித்தார். ஆனால் அவர் கால்கள், அவதார புருஷரின் அத்யந்த சீடரின் ஆணைப்படி இயங்குகிறது. என்பதை அவர் மட்டு மல்ல யாருமே அறிய மாட்டார்கள். தெய்வ ரகசியம் தனித்துவமானதுதானே. ஹிதலால் ஹௌரா இரயில் நிலையம் வந்து சேர்ந்தார். அவர் பயணச்சீட்டு தருபவரிடம் தன்னிடம் இருந்த சில ரூபாய்களைக் கொடுத்து நானளித்த பணத்திற்கு எந்த ஊர் வரை பயணம் செய்ய முடியுமோ அந்த ஊருக்கு பயணச்சீட்டு தாருங்கள் எனக் கேட்டார். டிக்கெட் தருபவர் தெய்வீக அருள் பெற்றவர். ஆதலால், ஹிதலாலைப் பார்த்ததும், இம்மனிதர் உன்னதமான ஆத்மா, இவன் செல்ல வேண்டிய இடம் புனிதக் காசி என்று முடிவு செய்து காசி வரை பயணம் செய்யலாம் எனக் கூறிப் பயணச்சீட்டை அளித்தார்.
காசியைப் பற்றியும் கங்கையைப் பற்றியும் அதன் மேன்மைப் பற்றியும் ஒரு நிகழ்வு. மிகவும் இறை நம்பிக்கையுடன் போற்றப்படும். அதை சிறிது பார்ப்போம். ஒரு முறை சிவபெருமானும் பார்வதி தேவியும் முதிய தம்பதியுருவில் கங்கை நதிக்கரைக்கு வந்தார்கள். முதியவர் கங்கை நதியில் புனித ஸ்நானம் செய்ய இறங்கியவர் நீரில் மூழ்கி விட்டார். பார்வதி தேவி தன் கணவரான முதியவரை காப்பாற்ற அரற்றத் தொடங்கினார். ஒரு நிபந்தனை விதித்தார். அது என்னவெனில், இதுவரை எவ்விதமான பாபச் செயலும் செய்யவில்லையோ அவர் மட்டுமே காப்பாற்றும் செயலில் இறங்கவேண்டும் என்பதே. முயற்சிக்கத் தொடங்கியவர்கள் எல்லோரும் தயங்கினர். இது ஏசு நாதர் பாவம் செய்யாதவர் முதல் கல்லை குற்றஞ்சாட்டப்பட்ட அபலைப் பெண் மீது எறிய வேண்டும். என்றதைப் போன்றதுதானே இந்த நிபந்தனையும்.
இச்சமயத்தில் ஒரு மனிதன் இதயச்சுத்தியுடன், நம்பிக்கையுடன் அதாவது கங்கை ஸ்நானம் அனைத்துப் போக்கும் என்ற உணர்வுடன் ஸ்நானம் செய்தபின் முதியவரை (சிவனை) கரை சேர்த்தான். பாருங்கள் சிவனையே கரை சேர்த்துள்ளான். சிவபெருமான் கரையேற்றிவிட்டார். அச்சமயத்தில் பார்வதிதேவி, பொய்க் கோபத்துடன் காப்பாற்றியவரை நோக்கி, நான் சொன்ன நிபந்தனையை மீறி ஏன் இச்செயலைச் செய்தாய். நீ என்ன எப்பாவமும் செய்யாதவனா எனக் கூறினாள். அதைக் கேட்ட மனிதன் மிகவும் பவ்யமுடன் தாயே... நான் செய்தபாவங்கள் எல்லாம் முழு நம்பிக்கையுடன் கங்கையில் ஸ்நானம் செய்தவுடன் பாவங்கள் யாவும் பொசுங்காதோ எனக் கேட்டான். இவ்வார்த்தையைக் கேட்டவுடன் இறைத் தம்பதியர்க்காவும் மகிழ்ந்து அனைவருக்கும் தன் தெய்வத் திருவுருவில் ஆசியளித்தார்கள். இத்துடன் காசி க்ஷேத்திரத்தின் பெருமையையும் கங்கா மாதவின் பெருமையையும் நிறைவு செய்துவிட்டு, நமது முருக அவதார் பாபாஜியின் பரிபூரண அநுக்ரஹம் பெற்ற மகாஷயரின் சரிதம்.
நமது ஹீரோ ஹிதலால் அவர்களுக்கு, காசி மாநகரம் புதிய இடம் அந்த மாநகரம் மட்டுமல்ல அவர் ஊரின் அருகிலுள்ள பெரு நகரங்களும் புதிதுதான். இது நமக்குச் சற்றும் புதியதல்லவே. அது இருக்கட்டும்... நமது நண்பர் காசிமா நகர் வந்தடைந்தார். அவரா வந்தார். மகாஷயர் என்னும் புனிதரால் அல்லவா, வந்துள்ளார். வேடிக்கை என்னவென்றால் ஹிதலாலுக்கு இது தெரியாது. காசி வந்த ஹிதலால் வங்காளிகள் வாழ்ப் பகுதிக்கு வந்தார். திடீரென ஒரு வீட்டிலிருந்து அழகான கனவான் வெளியில் வந்து அவனைக் கூப்பிடுவதைப் பார்த்தான் அவர் ஹிதலாலைப் பார்த்து இங்கே வாருங்கள் என அழைத்து உபசாரங்களைச் செய்தார். பின்புதான் அந்தக் கனவான் மகாத்மா மகாஷயர் எனத் தெரிந்து கொண்டார். பின் மகாஷயர், அன்பா நீ தீட்ஷை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காகத்தான் உன்னை இங்கு வரவழைத்தேன் என அன்புடன் கூறினார். பின்பு தீட்ஷையளித்தார். பின்பும் சொல்ல வேண்டுமா... என்ன அவன் தன்யனாகி, மிக உன்னத நிலையை அடைந்தான்.
மற்றொரு நிகழ்வும், அது விஞ்ஞானத்தையே வினாக்குறியாகிவிட்டது. ஒரு நாள் தன் வீட்டின் அருகில் உள்ள சந்திர மோகன் என்ற இளைஞனைச் சந்தித்தார். அவ்விளைஞன் அப்பொழுதுதான் டாக்டருக்கு தேர்வு பெற்றிருந்தான். அவ்விளைஞனுக்கு ஆசிகள் அளித்தபிறகு, மருத்துவத்துறை பற்றி பல கேள்விகள் கேட்டபிறகு தான் இறந்துவிட்டேனா அல்லது உயிருடன் இருக்கிறேனா எனச் சோதி என்றார். ஆச்சர்யமுற்ற அவ்விளைஞன் வியப்புற்றான். என்ன இது... உயிருடன் உள்ளவரே கேட்கின்றாரே எனத் தயங்கியவாறே பார்த்தான். என்ன ஆச்சரியம்... பரிசோதனையின்படி அவரது நாடி செயலிழந்துவிட்டது. இதயம் நின்று விட்டது. பிரமித்து நின்ற அவ்விளைஞனிடம் தனக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கச் சொன்னார். அய்யா... நீங்கள் இயல்பாக இயங்குகிறீர்கள். உடல் வலிமையுடன் இருக்கிறீர்கள். ஆனால் வைத்திய ஆய்வின்படிதான் நீங்கள் இறந்து விட்டீர்கள். என்று கைகளைப் பிசைந்தவாறு காலில் விழுந்தார். பின்பு மகாஷயர் சிரித்துக் கொண்டே இளைஞனே நீ மருத்துவத் துறைக்கப்பால் ஆன்மீக அற்புதங்களை அறிந்து கொள்ள வேண்டியது. அதிகமிருக்கிறது. ஆன்மீகத்தை என்றுமே விஞ்ஞானம் வெற்றிபெற முடியாது. யோகிகள் எளிதாக அந்த ஞானத்தைத் தேடிக் காண முடியும் என்றார். அனுபவத்தில் அனுபூதிக் கண்ட ஆன்மிக எல்லை கண்ட மகாஷயரின் மணிமொழி சாசுவத உண்மையல்லவா!