பதிவு செய்த நாள்
12
அக்
2015
10:10
அழகர்கோவில்: மதுரை சோலைமலை முருகனுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில், முருக பக்தர்கள் சபையினரால் வைர கிரீடம் செய்வதற்கான பூஜை நடந்தது.சுவாமிக்கு ஏற்கனவே ரூ.30 லட்சத்தில் வைர வேலும், ரூ.1.37 கோடி மதிப்பில் தங்கத் தேரும் செய்யப்பட்டன. தற்போது ரூ.1.50 கோடியில் வைர கிரீடம் செய்ய முருக பக்தர்கள் சபை முன் வந்தது. இப்பணி நேற்று துவங்கியது.இதற்கு தேவையான 150 காரட் வைர கற்கள், ஒரு கிலோ தங்கம் ஆகியவை மூலவர் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்டது. சஷ்டி மண்டபத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தன. பின், சுவாமி முன் கிரீடம் செய்வதற்கான தச்சுப்பணி நடந்தது. தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செல்லத்துரை, உதவி அதிகாரி அனிதா, சபை கமிட்டி நிர்வாகி சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், மதுரை, காரைக்குடியில் கிரீடம் செய்யும் பணியும், மும்பையில் வைர கற்கள் பதிக்கும் பணியும் நடக்க உள்ளது. தைப்பூசம் அன்று கிரீடம் சாத்துப்படி செய்யும் வகையில், 4 மாதங்களில் பணிகள் முடியும், என்றனர்.