பதிவு செய்த நாள்
19
அக்
2015
11:10
சென்னை: நவசக்தி கோவில்களில் ஒன்றான திருவுடையம்மன் கோவிலுக்கு, 32 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாமல் இருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மீஞ்சூர் அடுத்த, மேலூர் கிராமத்தில், திருமணங்கீஸ்வரர் – திருவுடையம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, 1983ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
32 ஆண்டுகளாக...: அதன்பின், 2000ம் ஆண்டு, கும்பாபிஷேக பணிகளுக்காக, பாலாலயம் செய்யப்பட்டதுடன், பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும், 2004ல் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், 2014ம் ஆண்டு, 30 லட்சம் ரூபாய் நிதியில், திருப்பணிகள் துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுநாள் வரை, எந்த பணிகளும் மேற்கொள்ளப் படவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம், 32 ஆண்டுகளாக நடைபெறாமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, கோவிலில் புதர் மண்டியும், சுற்றுச்சுவர் உடைந்தும், கோபுரங்களில் செடிகள் வளர்ந்தும் உள்ளன. நவக்கிரக சன்னிதி கட்ட துவங்கிய பணிகள், பாதியில் நிறுத்தப்பட்டன. கோவிலுக்கு என, 100 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. ஆனால், கோவிலுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் முறையாக வருவதில்லை. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தாலு ம், கோவிலை பராமரிக்காமல் அறநிலைய துறை அலட்சியம் காட்டுகிறது. திருப்பணிக்கு நிதியுதவி வழங்க, பக்தர்கள் தயாராக இருந்தாலும், அறநிலையத் துறை திருப்பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசின் கவனத்திற்கு...: இதுகுறித்து அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழமையான கோவில் என்பதால், தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, பழமை மாறாமல் புதுப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர். அங்கு, நடத்த வேண்டிய திருப்பணி குறித்து மறு மதிப்பீடு செய்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். தற்போது, தனியார் பங்களிப்புடன் பணிகளை துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.