மயிலாடுதுறை காவிரி நதியில் புனித நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2015 05:10
மயிலாடுதுறை: கங்கை முதலான புன்னிய நதிகளின் பாவச்சுமைகள் நீங்க ஐப்பசி மாதம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவிரிநதியில் நீராட சிவபெருமான் வரமளித்தார்.அதன்படி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாதத்தில் நீராடினால் அனைவருடைய பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் காசிக்கு வீசம் கூடுதலான தலமாக மயிலாடுதுறை விளங்கிவருகிறது.பெருமை வாய்ந்த துலா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது. துலா உற்சவத்தை ஒட்டி சுவாமி, அம்பாள் காவிரி துலாக்கட்டத்தின் இரு கரைகளிலும் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
துலா மாதமான, ஐப்பசி மாதம் முழுவதும் இந்தியா மட்டும் அல்லாது பல்வேறு நாடுகளில் இருந்து மயிலாடுதுறைக்கு வரும் லட்சகணக்கான பக்தர்கள் தங்களது பாவத்தைபோக்க காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனிதநீராட மயிலாடுதுறைக்கு வருகின்றனர். ஆனால் காவிரியில் தண்ணீர் இல்லாததுடன்,கழிவுநீர் தேங்கியும், குப்பைகள் கொட்டிக்கிடப்பதையும் கண்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்துவரும் பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் தேங்கிக்கிடக்கும் தண்ணீரிலேயே குளித்து விட்டு செல்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் சூழல் உறுவாகியுள்ளது. இந்நிலையில் துலா உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் நீராட வசதியாக மாதம் முழுவதும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவும், கழிவுநீர் கலக்காமல் தடுத்து துலாக்கட்ட காவிரிக்கரையில் கிடக்கும் குப்பைகளை அகற்றி சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு சுவாமி, அம்பாள் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவே ண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்களின் கோரிக்கைகளுக்கு தமிழகஅரசு செவிசாய்க்குமா?