பதிவு செய்த நாள்
24
அக்
2015
11:10
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவில்களான ஐந்து கோவில்களின் கும்பாபிஷேகம், 21.75 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட உள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு மொத்தம், 29 உபகோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில், கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள கோவில்களை தேர்வு செய்து, மகா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டது.இதில் முதற்கட்டமாக, திருத்தணி லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், விஜயராகவ பெருமாள் கோவில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் வங்கனுார் லட்சுமிநாராயண சுவாமி கோவில் ஆகிய ஐந்து கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இக்கோவில்களில், 21.75 லட்சம் செலவில், தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்பணிகள் இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதையடுத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐந்து கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து, அதற்கான திருப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், 21.75 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இதுதவிர, உபயதாரர்கள் முன்வந்து கும்பாபிஷேகத்திற்கான கலசங்கள் மற்றும் பூஜைகளுக்கான செலவுகள் செய்ய சம்மதம் தெரிவித்து உள்ளனர். திருப்பணிகளை விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் நடத்தப்படும். இதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த, மற்ற கோவில்களையும் தேர்வு செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.