கன்னிவாடி : ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் நடைபெறும் அன்னாபிஷேக விழா, தற்போது கிராமப்புற கோயில்களிலும் நடைபெறத்துவங்கியுள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில், பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். பால், சந்தனம், பஞ்சாமிர்தம் என, 16 வகை அபிஷேகங்களுடன் ஆராதனை நடக்கும். ஐப்பசி மாத பவுர்ணமியில், ஓரளவு வருவாய் உள்ள சிவன் கோயில்களில் அன்னத்தால் அபிஷேக, அலங்காரம் நடைபெறும். நகர் பகுதியைத்தொடர்ந்து, கிராமப்புற கோயில்களிலும் இவ்வகை உற்சவங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்தாண்டு கன்னிவாடி பகுதியில் உள்ள கோயில்களில் அன்னாபிஷேக ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. நாளை(அக். 27), கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், காலை 9 மணிக்கு சோடஷ அபிஷேகத்துடன் அன்ன அலங்காரம், நாகாபரணத்துடன் அன்னாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. கசவனம்பட்டி மவுனகு ரு சுவாமி கோயிலில் காலை 7 மணிக்கு வெண்சாதத்தால் அன்னக்காப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடக்க உள்ளது. பகல் 12 மணிக்கு பவுர்ணமி பூஜை நடத்தப்பட்டு, மகாஅன்னதான பூஜை துவங்குகிறது. வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலிலும் அன்னாபிஷேக ஆராதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.