பதிவு செய்த நாள்
26
அக்
2015
12:10
திருவண்ணாமலை: மஹா தீப நெய் காணிக்கை பக்தர்கள் செலுத்தலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான கார்த்திகை தீப திருவிழா வரும் நவ., 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நவ., 25ம் தேதி, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது. நெய் காணிக்கை செலு த்த விரும்புவோர், அவரவர் விருப்பத்திற்கேற்ப நெய்யாகவோ, அல்லது அதற்கான பணமாகவோ கோவில் நிர்வாகத்திடம் செலுத்தலாம். பணமாக செலுத்த விரும்புவோர், இணை ஆணையர் செயல் அலுவலர், அருணாசலேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயரில் கோவில் நிர்வாக அலுவலகத்தில் நேரடியாகவோ, அல்லது மணியார்டர், அல்லது காசோலை, அல்லது டி.டி.யாகவோ செலுத்தலாம். ஒரு கிலோ நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர் ரூ.200, அரை கிலோ நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர் ரூ.100, கால் கிலோ செலுத்த விரும்புவோர் ரூ.50 வழங்கலாம். நெய் நேரடியாக வழங்க விரும்புவோர், தீப திருவிழாவில் நெய் குடம் கட்டும் விழாவில் கலந்து கொண்டு நெய் செலுத்தலாம்.