பதிவு செய்த நாள்
26
அக்
2015
12:10
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த செக்கோடி மோட்டுப்பட்டியில் நேற்று நடந்த பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரியை அடுத்த செக்கோடி, மோட்டுப்பட்டி பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 22ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. மதியம், 12.20க்கு பச்சையம்மன் மூலாலய நவரத்ன அஷ்டபந்தன-ரக்சாபந்தன சமர்பணம் நடந்தது. நேற்று காலை, 5.30 மணிக்கு மங்கள இசையும், 6.30 மணிக்கு வேத மந்திர பாராயணமும், 7.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, ரக்சபந்தனும், மஹா பூர்ணாஹதி நடந்தது. 10.30 மணிக்கு, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடும், 11 மணிக்கு மேல், மஹா கும்பாபிஷேகமும், 11.20 மணிக்கு, பரிவாரங்கள், நுழைவாயில் கோபுர கும்பாபிஷேகமும், 11.30 மணிக்கு, பச்சியம்மன், மன்னாரீஸ்வரர் ஸ்வாமிக்கு மஹா அபிஷேகம், தீபாதாரனையும் நடந்தது. மாலை, 6.30 மணிக்கு ஸ்வாமி திருகல்யாணமும், இரவு, 8.30 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.