நான்காவது முறையாக அஞ்சாத்தம்மன் கோவிலில் நகை கொள்ளை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2015 11:11
ஊத்துக்கோட்டை: அஞ்சாத்தம்மன் கோவிலில் நான்காவது முறையாக மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். எல்லாபுரம் ஒன்றியம், குமரப்பேட்டையில் உள்ளது அஞ்சாத்தம்மன் கோவில். பழமை வாய்ந்த இந்த கிராம கோவிலில், கடைசியாக, 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபடுவர். அப்போது தங்களது நேர்த்திக் கடனை செலுத்த அங்குள்ள உண்டியலில் பணத்தை போடுவர். நேற்று முன்தினம் இரவு, கோவில் அர்ச்சகர் காமராஜ், வழக்கம்போல் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டார். தகவலறிந்த பெரியபாளையம் போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அம்மன் கழுத்தில் இருந்த அரை சவரன் தாலி மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. இந்த கோவிலில், நான்காவது முறையாக கொள்ளை நடந்துள்ளது.