தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2011 12:07
வள்ளியூர் : தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய தேர்பவனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. காலை 5 மணி முதல் திருப்பலி நடந்தது. 6 மணிக்கு திருயாத்திரை, திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு உவரி பங்குதந்தை பர்னபாஸ் அடிகளார் கொடியை அர்ச்சை செய்து கொடியேற்றப்பட்டது.திருவிழாவின் முக்கிய நாளான வரும் ஆக.3ம் தேதி 8ம் திருவிழா நடக்கிறது. அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் ஆம்புரோஸ் தலைமையில் திருப்பலி, திருயாத்திரை, மறையுறை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 4ம் தேதி 9ம் திருவிழா அன்று மதுரை மறைமாவட்ட ஆயர் பீட்டர் பர்னான் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், மறையுரையும் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஆனந்தராஜா, பங்குதந்தை அந்தோணிதாஸ், உதவி பங்குதந்தை அமலன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்கத்தினர், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.