திருச்செந்தூர் வள்ளிகுகையில் திருமலைநாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2011 12:07
ஆறுமுகநேரி : திருச்செந்தூர் வள்ளிஅம்மன் குகைக்கோயிலில் திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள வள்ளி அம்மன் கோயிலில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான தவசிமுத்து கூறியதாவது: தாமிரபரணி ஆறு ஓடிவந்து கலந்த திருச்செந்தூர் கடற்கரைப்பகுதியில் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிவுப்பாறை உள்ளது. தோல் பழங்காலம், சங்ககாலம், என்று காலம் கடந்து நிற்கும் இம்மலையின் குடைவரையில் மூலவர் பாலசுப்பிரமணியரின் கருவறை, பஞ்சலிங்கங்கள் பள்ளி கொண்ட பெருமாள், வள்ளியம்மனின் குகைக்கருவறை ஆகிய உள்ளன. சந்தானமலை என்றழைக்கப்படும் இம்மலையை ஆதிசங்கரர் கந்தமாதன பர்வதம் என்று குறிப்பிடுகிறார். வள்ளியம்மன் குகைக் கோயிலினுள் செல்லும் குடைவரை வழியில் நான்கரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்வெட்டொன்று உள்ளது. முப்பத்து நான்கு வரிகளில் அக்காலத் தமிழ் வடிவத்தில் உள்ளது. மின்விளக்குகள் இல்லாமலிருந்தாலும், எண்ணெய் அழுக்கு மூடியிருந்தபடியாலும் மூன்று நூற்றாண்டுகளாக இக்கல்வெட்டு கண்டறியப்படாமல் இருந்துள்ளது. கிபி.1656ல் திருமலை நாயக்கர் மதுரையை ஆட்சிசெய்த போது திருச்செந்தூரில் முத்தைய ஜோசியன் என்பவர் திருமலையின் உத்தரவின்பேரில் வள்ளிகுகையின் முன்மண்டபம், வெளியே கிணறு ஏற்படுத்தித் தினசரி வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இக்கல்வெட்டு வைகாசி மாதம் நாலாம் தேதியில் பொறிக்கப்பட்டதாகும். முருகப்பெருமானை திருமணம் செய்திட வள்ளியம்மன் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபட்டது இக்குகையில் என்பதை திருச்செந்தூர் ஸ்தலபுராணம் கூறுகின்றதையும் இக்கல்வெட்டு கூறுகிறது. கி.பி1648 ல் டச்சுக்காரர்கள் திருமலை நாயக்கருக்கு எதிராக திருச்செந்தூரை முற்றுகையிட்டு சிலைகள் நகைகள் ஆகியவற்றைக் கொள்ளையிட்டதுடன், செல்லும் போது எழில்மிகு சிற்பங்கள், கடற்கரையின் குடைவரைச்சிற்பங்கள் கட்டடங்களையும் சிதைத்துசென்றதாக வரலாறு கூறுகிறது. இக்கல்வெட்டு வாயிலாக 1656இல் திருமலை நாயக்கர் சிதைவுற்ற பகுதியை சீர்செய்து திருப்பணிகளையும் மேற்கொண்டது அறியமுடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.