பதிவு செய்த நாள்
05
நவ
2015
11:11
சேலம்: திருமலைகிரி கோவில் பிரச்னை தொடர்பாக, 21 கிராமங்களில், 144 தடை உத்தரவு போடப்பட்டது. கடந்த மாதம், ஐந்து கிராமங்களில் தடை உத்தரவு நீக்கிய நிலையில், தற்போது, மேலும், ஆறு கிராமங்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது. திருமலைகிரி, சைலகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக, இரு பிரிவினருக்கு இடையே பிரச்னை எழுந்ததால், கடந்த, மார்ச், 4ம் தேதி, அக்கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், பதட்டத்தை தணிக்க, 21 கிராமங்களில், 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த கிராமங்களில், போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, கூட்டமாக நிற்போரை விரட்டி வந்தனர். படிப்படியாக, இந்த கிராமங்களில் பதட்டம் தணிய ஆரம்பித்தது. கோவில் பிரச்னை, நீதிமன்றத்தில் உள்ளதால், பொதுமக்களும் அமைதி காக்க ஆரம்பித்தனர். தடை உத்தரவை நீக்குவது தொடர்பாக, கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். கடந்த மாதம், 2ம் தேதி, கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆலோசனையின்படி, சூரமங்கலம், கந்தம்பட்டி, கீரபாப்பம்பாடி, அரியாகவுண்டம்பட்டி, சித்தனூர் ஆகிய ஐந்து கிராமங்களில், 144 தடை நீக்கப்பட்டது. மேலும், 16 கிராமங்களில், தடை உத்தரவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம், ஆர்.டி.ஓ., விஜயபாபு உத்தரவின்பேரில், காட்டூர், கொல்லப்பட்டி, தளவாய்ப்பட்டி, நாயக்கன்பட்டி, முருங்கப்பட்டி, நல்லாம்பட்டி ஆகிய ஆறு கிராமங்களில், 144 தடை நீக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 21 கிராமங்களில், தற்போது, 10 கிராமங்களில் மட்டுமே தடை உத்தரவு நீடிக்கிறது. இதற்கான உத்தரவை, அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்களுக்கு, சேலம் ஆர்.டி.ஓ., விஜய்பாபு கடிதமாக அனுப்பி வைத்துள்ளார்.