பதிவு செய்த நாள்
12
நவ
2015
11:11
மதுரை : சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. ருசி, நுண்ணுாட்ட சத்துக்கள் மிகுந்த மதுரை கொழுந்து வெற்றிலையின் அருமையை, உலகிற்கு எடுத்து சென்ற பெருமை, சோழவந்தான் கொடிக்கால் வெற்றிலை விவசாயிகளுக்கு உண்டு. ஆந்திரா மோட்டா, கர்நாடகா கருப்பு என ஒட்டு ரக வெற்றிலையில் பல ரகங்கள் உண்டு. ஒட்டு ரகம் இல்லாத நாட்டு வெற்றிலை மதுரை சோழவந்தானில் மட்டும் விளைகிறது. இளம் பச்சை நிறத்தில்... அரச இலை போல் சிறிய அளவிலுள்ள சோழவந்தான் வெற்றிலைக்கு இன்றும் மவுசு குறையவில்லை.
முதல் சங்கம்: வெற்றிலை விவசாயத்தில் நேரடியாக, மறைமுகமாக விவசாயிகள், வியாபாரிகள் பயனடைகின்றனர். வெற்றிலை விவசாயத்தை அழிவில் இருந்து காக்கும் பொருட்டு 1964ல் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக துரைச்சாமிபிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அழுகாத வெற்றிலை: சோழவந்தான், திருவேடகம் உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் வெற்றிலை சங்க கட்டடத்துக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து வெளியூர்களுக்கு பச்சை வாழை மட்டையில் வெற்றிலையை பக்குவமாக அடுக்கி அனுப்புவர். பச்சை வாழை மட்டையில் வெற்றிலையை அடுக்குவதால் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு வெற்றிலை அழுகாது.
ஏற்றுமதி தரம் வாய்ந்தது: ஆந்திரா, கர்நாடகா வெற்றிலை தடிமனாக, காரச்சுவை அதிகமாக இருக்கும். இவற்றில் சுவை மற்றும் சத்துக்கள் குறைவு. சோழவந்தான் வெற்றி லையில் சுவை, நார்சத்துக்கள் அதிகம். வெளிநாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 500 கிலோ அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பரப்பளவு சுருங்கியது: வெற்றிலை விவசாயி செல்வம்: முன்பு 1500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை கொடிக்கால் சுருங்கி விட்டது. பூச்சித்தாக்குதல், செலவினம் உள்ளிட்ட காரணங்களால் தொழிலுக்கு பாதிப்பு.
வெற்றிலை வியாபாரி சிருகாமணி: நாட்டு வெற்றிலையில் தான் சுவை அதிகம். சோழவந்தான் வெற்றிலை சங்கத்தில் இருந்து தினமும் வெற்றிலையை விலைக்கு வாங்கி சில்லரை வியாபாரம் செய்கிறேன். மொத்தம் 20 வியாபாரிகள் உள்ளனர்.