பழநி: கந்தசஷ்டி விழாவிற்காக பழநி கோயில் யானை கஸ்துாரி யானைப்பாதை வழியாக மலைக்கோயில் சென்றது. அங்கு தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றது.பழநி மலைக்கோயிலில் நடைபெறும் ஒரே ஒரு திருவிழா கந்த சஷ்டி விழா மட்டும்தான், இவ்விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கி நவ.,18 திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. ஆண்டு முழுவதும் பெரியநாயகியம்மன் கோயிலில் தங்கியுள்ள யானை கஸ்துாரி, கந்தசஷ்டி விழாவிற்கு மட்டுமே மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லப்படுவது சிறப்பு. கஸ்துாரி யானை, நேற்று காலை 9மணிக்கு மலை அடிவாரம் பாத விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து யானைப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றது. அங்கு சின்னக்குமாரசுவாமி (முருகப்பெருமான்) சூரன்களை வதம் செய்யும் வரை வடக்குவெளி பிரகாரத்தில் தங்கி, ஆறுநாட்கள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்க உள்ளது.
காப்புக்கட்டுதல்: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டுதல் நடந்தது. பக்தர்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். இதைப் போலவே திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களிலும் முருகப்பெருமானை வழிப்பட்டு ஏராளமான பக்தர்கள் கையில் காப்புக்கட்டி கொண்டனர். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் நவ.,17, திருக்கல்யாணம் நவ.,18ல் நடக்கிறது.