பதிவு செய்த நாள்
14
நவ
2015
11:11
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், உற்சவ காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் சூரசம்ஹார விழா துவங்கியுள்ளது. சூரசம்ஹார விழாவில், இன்று மாலை, 5:00 மணியளவில் வேலாயுதசுவாமிக்கு அபிசேக அலங்கார பூஜைகள் நடக்கின்றன. நாளை, மாலை, 5:00 மணியளவில் திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து அபிசேக அலங்கார பூஜையும் இடம்பெறுகின்றன. நவ. 16ம் தேதி மாலை, 5:00 மணியளவில் வேல் வாங்கும் உற்சவம் கிணத்துக்கடவு கரியகாளியம்மன் கோவிலில் துவங்குகிறது. நவ. 17ல் பகல், 12:00 மணிக்கு வேலாயுதசுவாமி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகளும், மாலை, 6:00 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் நடக்கிறது.
இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் வேலாயுதசாமி எழுந்தருளி, கரிய காளியம்மனிடம் பெறப்பட்ட சக்தி வேலுடன் பொன்மலையை சுற்றி வரும்போது, வேலை சூரனை நோக்கி வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பொன்மலை வேலாயுதசாமி கோவில் அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு, பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு வழியாக சிவலோகநாதர் கோவில் அருகே வரும்போது, மலையின் அக்னி மூலையில் முதல் சூரனான தாரகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், பின் மலையின் கன்னி மூலையான தேரோடும் வீதியில், இரண்டாவது சூரனான சிங்கமுகன் வதமும், கிருஷ்ணசாமிபுரம் வீதியில் மலையின் வாயு மூலையில், மூன்றாவது சூரனான பானுகோபன் வதமும், நான்காவது சூரனான சூரபத்மன், மலையின் நிருதி மூலையான கோவை ரோட்டில் வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும், விரதமிருந்த பக்தர்களுக்கு, வாழைத்தண்டு, திராட்சை, மிளகாய், கேரட், வெள்ளரிக்காய், மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறி மற்றும் பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வரும், 18ம் தேதி காலை, 9:00 முதல் 10:30 மணிக்கு வேலாயுதசாமிக்கு திருக்கல்யான உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நவ. 19, பகல் 12:00 மணிக்கு மகா அபிேஷகத்துடன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் வெண்மணி, சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குழுவினர், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.