பதிவு செய்த நாள்
16
நவ
2015
11:11
சென்னை: கர்நாடக இசைப் பிரியர்களின் செவிகளுக்கும், விழிகளுக்கும், விருந்தளிக்கும் வகையில், சங்கீத மும்மூர்த்திகளில் முதலாமவரான, ஸ்ரீ தியாராஜரின் வரலாறு, முதன்முதலாக மேடை ஏற உள்ளது. இதுகுறித்து, நாடகத்தின் எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர் ஆகியோர் கூறியதாவது: ஸ்ரீ தியாகராஜர் கதை, வசனம் எழுதியுள்ள, வீ.எஸ்.வி., கூறியதாவது: எண்ணம் தோன்றியது:நான், கடந்த 2007ம் ஆண்டு, ஸ்ரீ தியாகராஜர் பற்றி ஒரு நுால் எழுதினேன். அது, இசைப் பிரியர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு, அதை நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மேடை நாடக நடிகர், டி.வி.வரதராஜனிடமும், கர்னாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீயிடமும் கூறினேன். அவர்கள் உடனே ஒப்புதல் அளித்தனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, பாம்பே ஜெயஸ்ரீ கூறியதாவது: தியாகராஜரை பற்றி பல்வேறு ஆய்வுகளை நடத்திய பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு, எனக்கு கிடைத்திருப்பதாக நினைத்து, இந்த நாடகத்திற்கு இசையமைக்க சம்மதித்தேன். இசையமைப்பு என்பது, என்னை பொறுத்தவரை, பெரிய வார்த்தை. தியாகராஜர் தான், சங்கீத உலகத்தின் குரு. அவர் அமைத்த மெட்டுக்களை, பாடகர்களை கொண்டு பாட வைத்தும், சிறு சிறு இசை கோர்ப்பும் தான் செய்திருக்கிறோம். அப்படித்தான் சொல்ல வேண்டும். ரசிகர்களை போலவே, நானும், தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றை மேடையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். தியாகராஜர், தெலுங்கு கீர்த்தனைகளை பாடியவராக இருந்தாலும், கோபாலகிருஷ்ண பாரதி, பிறைசூடனின் தமிழ்ப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. நான், ஓ.எஸ்.அருண், சேர்த்தலை ரங்கநாத சர்மா, குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் பாடியிருக்கிறோம். எம்பார் கண்ணன், வயலின்; பால சாய், புல்லாங்குழல்; அனந்தநாராயணன், புல்லாங்குழல் என, பக்கவாத்திய கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். நாடகத்தில், தியாகராஜர் வேடத்தில் நடிக்கும் டி.வி.வரதராஜன் கூறியதாவது: தியாகராஜ சுவாமிகள், தியாக பிரம்மம் என்றெல்லாம் வணங்கப்படும் ஸ்ரீ தியாகராஜர், 1767ல் பிறந்து, 80 வயது வரை, திருவையாற்றில் வாழ்ந்தவர். அவரின் சங்கீதத்தில் சொக்கிய மன்னர் சரபோஜியே, பொன்னும் பொருளும் அளிக்க முன் வந்த போதும், அதை ஏற்காமல், ராமனை மட்டுமே பாடி, உஞ்சவிருத்தி பெற்றவர். பல்வேறு ஆய்வுகள்:அவரின் வாழ்வில் நடைபெற்ற சுவையான, பலராலும் அறியப்படாத பல்வேறு சம்பவங்களை, காட்சிகளாக அமைத்து, இந்த நாடகத்தை இயக்கி நடித்திருக்கிறேன். இதற்காக, ஓராண்டாக பல்வேறு ஆய்வுகளிலும் ஈடுபட்டேன். தியாகராஜரின் இளமை கால காட்சிகளை, கார்டூனிஸ்ட் கேசவ் வரைந்து, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருவையாற்றில் உள்ள தியாகராஜர் சமாதியில், எங்கள் குழுவினர் பூஜை செய்த பின், இந்த நாடகத்தை துவங்கி உள்ளோம். இது தான், நடிக்கும் முதல் வாழ்க்கை வரலாற்று நாடகம். இந்த நாடகம், வரும், டிச.,1ம் தேதி, மாலை 6:45 மணிக்கு, நாரத கான சபாவில் அரங்கேறுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.