பதிவு செய்த நாள்
17
நவ
2015
12:11
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நடந்தது. திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கக் கவசத் திருப்பணி நடந்து வருகிறது. தற்போது கோயில் ராஜகோபுரம், தாயார்,ஆண்டவர் ஆழ்வார்,எம்பெருமானார்,கிருஷ்ணன்,நம்பிகள், மணவாள முனிவர்,ஆஞ்சநேயர்,நரசிம்மர் சன்னதிகளுக்கு திருப்பணி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு நவ.13ல் பாலாலயத்திற்கான ஆச்சார்யார் அழைப்பு, அனுக்ஞை,மகாசாந்தி ஹோமம், முதற்கால யாகசாலை பூஜை ஏகாதசி மண்டபத்திலுள்ள யாகசாலையில் துவங்கியது. ரமேஷ் பட்டாச்சார்யார் தலைமையில் பூஜை நடந்தது. 4ம் கால யாகசாலை பூஜை நடந்த பின்னர், சன்னதிகளுக்கு கடம் புறப்பாடாகி, காலை 9.15 மணி அளவில் பாலாலயம் நிறைவடைந்தது. பின்னர் ராஜகோபுரத்திற்கு முகூர்த்தக்கால் ஊன்றுதல் உள்ளிட்ட திருப்பணிகள் துவங்கப்பட்டன. 2016ம் ஆண்டில் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.