சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோமுகத்தையும் சேர்த்து ஆறு நெற்றிக்கண்களில் நெருப்புப் பொறியை தோற்றுவித்தார். அப்பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறு தாமரை மலர்களில் ஆறுகுழந்தைகள் உருவாயின. அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் சிவன் ஒப்டைத்தார். பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த பார்வதி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள். அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது. கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன் என்று பொருள். முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம் சிவன், இந்தப் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் வானில் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் இனி உலகில் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார்.