கடவுள் ஐந்தொழில்களை (பஞ்ச கிருத்தியம்) நடத்துகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல் என்பன அவை. நமது வாழ்விலும், இவை ஐந்தும் நிகழ்வதை குறிப்பிடும் வகையில் கோவிலில் பூஜை நடக்கிறது. காலையில் மனிதன் முதல் எல்லா உயிர்களும் விழித்து எழுவதே மறுபிறவி தான். அப்பொழுது நிகழும் பூஜை, படைத்தல் என்பதைக் குறிக்கும். காலை, மதியம், மாலை ஆகிய வேளையில் உழைத்து வாழ்கிறோம். அப்பொழுது நிகழும் பூஜைகள் காத்தல் என்பதைக் குறிக்கும். பொழுது சாய்ந்து இருள் சூழும் வேளையில் வீடு திரும்புகிறோம். அதாவது நம் இடத்தில் ஒடுங்குகிறோம். அப்பொழுது நிகழும் பூஜைகள் அழித்தல் என்பதைக் குறிக்கும். அழித்தல் என்றால் ஒடுங்குதல் என்று பொருள். அப்போது பகலில் பட்ட கஷ்டங்களை மறந்து, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். கடவுள் நடத்தும் மறைத்தல் எனும் தொழிலால் தான் பழையதை மறந்து, கவலை இல்லாமல் மனிதனால் இருக்க முடிகிறது. இரவில் நிகழும் பூஜைகள் மறைத்தலைக் குறிக்கும். இரவில் அமைதியான மனநிலையோடு நிம்மதியாக உறங்குகிறோம். இதை எல்லா உயிர்களும் பெறவே, சுவாமி பள்ளியறைக்கு எழுந்தருளிய பின், பூஜை செய்யப்படுகிறது. இதை அருளல் என குறிப்பிடுவர். அதாவது பள்ளியறை பூஜை என்பது உயிர்கள் சுக போகம் அனுபவித்து மகிழ்வதற்காக கடவுள் ஆற்றும் திருவருட் செயலாகும்.