பதிவு செய்த நாள்
17
நவ
2015
06:11
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் ஆணவத்துடன் வந்த சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இதில் 10 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.
முருகனின் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு முருகபெருமான் சூரனை சம்ஹாரம் செய்து, சிவபெருமானை வழிபட்ட புகழ் பெற்ற திருத்தலமாகும். இந் நிகழ்ச்சியினை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
கந்தசஷ்டி விழா நவ., 12 ல் துவங்கியது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கோயில் வளாக பகுதிகளில் தங்கி விரதம் இருந்து வந்தனர். தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தினமும் காலை 6 மணிக்கு யாகசாலையில் ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளினார். பின் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன், சண்முகவிலாச மண்டபத்தில் மதியம் 1.30 மணிக்கு எழுந்தருளுவார். பின் ஜெயந்தி நாதர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து கோயில் வந்து சேரும் நிகழ்ச்சிகள் நடந்தது. கோயிலில் உள்ள மண்டபத்தில், தினசரி கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தது. சூரசம்ஹாரம்: இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 6மணிக்கு யாகசாலை மணடபத்தில் ஜெயந்தி நாதர் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.
மதியம் 1 மணிக்கு சண்முக விலாச மண்டபத்தில் ஜெயந்தி நாதர் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. மாலை 4.00 மணிக்கு ஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். பின் 4.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஜெயந்திநாதர் புறப்பட்டார். சூரன் ஆணவத்துடன் 5 மணிக்கு புறப்பட்டு வந்தான் அங்கு கஜமுகத்துடன் வந்த சூரனின் தலையை ஜெயந்திநாதர் மாலை 5.19 மணிக்கு கொய்தார்.பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பினர். பின் சிங்கத்தலையுடன் வந்த சூரனை 5.39 க்கு,ஜெயந்திநாதர் தலையை கொய்தார். சூரபதுமனாக வந்தவனை 5.53மணிக்கு தலையை கொய்தார். இறுதியில் சேவலாக வரும் சூரனின் உடலை இரண்டாக பிளந்து, ஒரு பகுதியை மயிலாகவும், ஒரு பகுதியை சேவலாகவும் ஜெயந்தி நாதர் ஆட் கொண்டார். ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குளித்து முருகனை தரிசித்து விரதத்தை முடித்துக் கொண்டனர்.