பதிவு செய்த நாள்
30
ஜூலை
2011
10:07
நாமக்கல் சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிக்கிருத்திகை நவசண்டி ஹோமம் மற்றும் லட்சார்ச்சணையில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் மகா நவசண்டி ஹோமம், லட்சார்ச்சணை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு, 34ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை மற்றும், 13ம் ஆண்டு மகா நவசண்டி ஹோமம், ஏகாதச ருத்ராபிஷேகம், லட்சார்ச்சனை கடந்த, 25ம் தேதி மகா கணபதி பூஜை, கணபதி, லட்சுமி குபேர மற்றும் நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, முருகபெருமானுக்கு, 108 சங்கு பூஜை, ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது.மேலும், சவுந்தரவள்ளி அம்பாளுக்கு முதற்கால லட்சார்ச்சனை துவக்கம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, அஸ்திர, தன்வந்திரி, சுயம்வர பார்வதி, சாந்தான கோபாலகிருஷ்ண, பைரவர், தட்சிணாமூர்த்தி மற்றும் காரியசித்தி ஹோமம், பிரதோஷத்தை முன்னிட்டு சோமேஸ்வரர் ஸ்வாமிக்கு ஏகாதச ஸ்ரீருத்ர ஹோமமும் நடந்தது.நேற்று காலை 7.30 மணிக்கு, துர்கா லட்சுமி, சரஸ்வதி தேவியின் நவசண்டி ஹோமம், கன்னிகா வடுக, சுமங்கலி, தம்பதி, கோமாதா, அஸ்வ மற்றும் கஜ பூஜை, பூர்ணாகுதி, கலச தீர்த்த அபிஷேகம், மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 5 மணிக்கு ஸ்ரீசோமேஸ்வரர் சவுந்தரவள்ளி அம்பாள் திருக்கல்யாணம் பூஜையும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம், தக்கார் வரதராஜன் மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.