சபரிமலை: சபரிமலையில் பக்தி பூர்வமாக நடைபெற்ற களபபூஜைக்கு பின்னர் களபம் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டலகால பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் அதிகாலை 4.15 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும் தொடர்ந்து நெய்யபிஷேகம் நடைபெறும். இதனால் ஐயப்பனின் விக்ரகத்தில் ஏற்படும் சூட்டை தணிப்பதற்காகவும், ஐயப்ப சைதன்யத்தை (சக்தி ) அதிகரிப்பதற்காகவும் களபபூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை பக்தர்களின் வழிபாடாக நடத்தப்படுகிறது. பூஜிக்கப்பட்ட பிரம்ம கலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு அதற்கு தந்திரி பூஜைகள் நடத்துகிறார். அதனை மேல்சாந்தி கையில் ஏந்திய படி தந்திரி மற்றும் தேவசம் அதிகாரிகளுடன் கெட்டி மேளம் முழங்க கோயிலை வலம் வருகின்றனர். பின்னர் ஸ்ரீகோயிலுக்குள் கலசசம் கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனின் விக்ரகத்தில் களபம் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டுக்கு கட்டணமாக மூவாயிரம் ரூபாய், களபாபிஷேகத்துக்கான பொருட்களுக்கு 16 ஆயிரத்து 500 ரூபாய் என 19 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.