பதிவு செய்த நாள்
24
நவ
2015
11:11
பொங்கலூர்: பொங்கலூர் வலுப்பூரம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, வேத மந்திரம் முழங்க, கோபுர கலசங்களுக்கும்; தொடர்ந்து, வலுப்பூரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கும்பாபிஷேகம் நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. காலை, 10:15க்கு, புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. நண்பகல், 12:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அமைச்சர் ஆனந்தன், எம்.எல்.ஏ., பரமசிவம், அலகுமலை அறங்காவலர் குழு தலைவர் சின்னு, மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஒன்றிய தலைவர் சிவாசலம், வலுப்பூரம்மன் கோவில் திருப்பணிக்குழு தலைவர் சிதம்பரம், உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல் அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயின் மாயம்: கும்பாபிஷேகத்துக்காக யானை, குதிரைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. ஆட வைப்பதற்காக, குதிரைகளை அடித்து துன்புறுத்தியதாக, பக்தர்கள் சிலர் வேதனையுடன் குறிப்பிட்டனர். அதேபோல், கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர் ஒருவரின், நான்கு பவுன் செயின், கூட்டத்தில் காணாமல் போனதால், சலசலப்பு ஏற்பட்டது.