சபரிமலை வரும் பக்தர்கள் வாகனம் நிறுத்த கூடுதல் வசதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2015 11:11
நாகர்கோவில்: சபரிமலை வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதி செய்யப்பட்டு உள்ளது. நிலக்கல் முக்கிய வாகன நிறுத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் அரசு பஸ்களில் வருவதை விட தனியார் வாகனங்களில் வருவதை விரும்புகின்றனர். இதனால் ஒவ்வொரு சீசனிலும் லட்சக்கணக்கான வாகனங்கள் சபரிமலை சென்று திரும்புகிறது. இந்த வாகனங்களை நிறுத்த பம்பையில் போதுமான வசதிகள் இல்லை. இதனால் நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டது.இந்த ஆண்டு நிலக்கல்லில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பத்தாயிரம் வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்தும் அளவு விரிவு படுத்தப்பட்டுள்ளது. இங்கு தரை இண்டர்லாக் கான்கிரீட் கட்டைகள் மூலம் அழகு படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து மாநில தகவல் மையங்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.நிலக்கல் தவிர பம்பையில் பம்பை ஹில்டாப்1, 2, சக்குப்பபாலம்1, 2 என நான்கு வாகன நிறுத்தங்கள் உள்ளன. இங்கு கார் போன்ற சிறிய வாகனங்கள் மட்டுமே பார்க்கிங் செய்யப்படுகின்றன.வேன், பஸ் போன்றவை பம்பையில் பக்தர்களை இறக்கி விட்டு, நிலக்கல் சென்று விட வேண்டும். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் கேரள அரசு பஸ்சில் நிலக்கல் சென்று அங்கிருந்து ஊருக்கு செல்ல வேண்டும்.வாகனம் நிறுத்தும் இடத்துக்கான டோக்கன் சாலக்கயத்தில் போலீசால் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள இடத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும். அங்கு பார்க்கிங் கட்டணம் குத்தகைதாரரால் வசூலிக்கப்படும். இந்த சீசன் தொடக்கத்தில் திருவேணியில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டு கார்கள் மூழ்கியதால் அங்கு வாகனம் நிறுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.