பதிவு செய்த நாள்
30
நவ
2015
12:11
கரூர்: கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பக்தர்கள் நடவடிக்கை கண்காணிக்கப்படுவதுடன், கோவில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், கரூர் ஈஸ்வரன் கோவில், தாந்தோணிமலை வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் உட்பட, 13 கோவில்கள் உள்ளன. விசேஷ நாட்கள் மட்டுமின்றி, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களுக்கு வந்து செல்கின்றனர்.
கண்காணிப்பு: கோவில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக ஆங்காங்கே, சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு, அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கரூர் மாவட்ட அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரத்தினவேல்பாண்டியன் கூறியதாவது: அரசு அனுமதியுடன் ஆங்காங்கே பிரசித்தி பெற்ற கோவில்களில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதன்படி, கரூர் மாவட்டம், தாந்தோணிமலை வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில் முக்கியமான இடங்களில் மொத்தம், 13 கேம பொருத்தப்பட்டுள்ளது.
16 இடங்களில் கேமரா: கடந்த ஏழு மாதத்துக்கு முன், 2.50 லட்சம் ரூபாய் செலவில் கேமராக்கள் பொருத்தப்பட்டது. உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செலவு செய்யப்பட்டது. அதேபோல், கரூர் மேட்டுத் தெருவில் உள்ள ரங்கநாதஸ்வாமி கோவிலிலும், ஐந்து கேமரா, கடந்த மூன்று மாதத்துக்கு முன், ஒரு லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டது. இச்செலவும், உபயதாரர் மற்றும் கோவில் நிர்வாகம் தான் செய்துள்ளது. கரூரில் நடுநாயகமாக விளங்கும் ஈஸ்வரன் கோவிலில் உபயதாரர் மூலம், மூன்று லட்சம் ரூபாய் செலவில், 16 இடங்களில், சிசிடிவி காமிரா வைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நகைகள் பாதுகாப்பு: கோவிலுக்குள் நுழையும் பகுதியில் இருந்து வெளியேறும் வரை பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும், அந்நியர் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியும். கோவில் விக்ரஹங்கள், நகைகள் பாதுகாப்பு அறைகள், நிதி இருப்பு போன்ற இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காமிராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.