பதிவு செய்த நாள்
08
டிச
2015
11:12
ஓசூர்: ஓசூரில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு, சந்திரசூடேஸ்வரர் மலை கோவிலில், நேற்று, 10 ஆயிரம் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஓசூரில் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் கார்த்திகை மாதத்தின், ஒவ்வொரு திங்கட்கிழமையும், கார்த்திகை சோமவார சுமங்கலி பூஜை நடத்தி வருகின்றனர். இந்த சோமவாரத்தில், பெண்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி, அதிகாலை வேளையில் நீராடி விட்டு, ஓசூர் சந்திரசூடேஸ்வர் மலை கோவிலுக்கு சென்று பூஜை செய்வர். இந்தாண்டு கார்த்திகை மாதத்தின், நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே, சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்கு பெண்கள் கூட்டம் வரத் துவங்கியது. நெய், அச்சுவெல்லம், அரிசிமாவு ஆகியவற்றில் விளக்கு ஏற்றி வந்த பெண்கள், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் சன்னதிகளில் வழிபட்டனர். நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மதியம், 12 மணிக்கு நடை சாத்தப்படவில்லை. தொடர்ந்து சந்திரசூடேஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால், 500 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.