திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தைமுன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ஆண்டாள் அவதரித்த நாளை முன்னிட்டு திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர உற்சவம் நடைபெறும். கடந்த ஜூலை 23 ம் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. கடந்த 9 நாட்களாக ஆண்டாள் பெருமாளுடன் வீதி வலம் வந்தார். நேற்று காலை 10 மணிக்கு பெருமாள் யாத்ராதானம் வந்து பின்னர் தேரில் எழுந்தருளினார். மாலை 4.35 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பின்னர்கொடியிறக்கம் நடந்தது. இன்று காலை கோயில் முன்பாக உள்ள திருப்பாற்கடல் குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்திருந்தனர். திருப்புத்தூர் அருகேயுள்ள என்.வயிரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன், வயிரவசுவாமி கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. புதிய வெள்ளி ரதம்கோயிலுக்கு வழங்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. தொடர்ந்து தினமும் காலை வயிரவர் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று காலை 8மணிக்கு வயிரவர் தேரில் எழுந்தருளினார். மாலை 6.15 மணிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. நாளை காலை தீர்த்தவாரி, மாலை திருக்கல்யாணம் நடக்கிறது.