பக்தர்களுக்கான காப்பீடு விரிவாக்கம்: தேவசம்போர்டு தலைவர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2015 02:12
சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்கான இன்ஷூரன்ஸ் மேலும் விஸ்தரிக்கப்படும் என்றும், இறந்தவர்கள் உடலை கொண்டு செல்லும் போது சம்பந்தப்பட்ட மாநில போலீசின் உதவி பெறப்படும் என்றும் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:சபரிமலை வரும் பக்தர்களுக்கான இன்ஷூரன்ஸ் ஏரியா அளவு தற்போது சபரிமலையின் 25 கி.மீ. சுற்றளவு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு அதிகரிக்கப்படும். விபத்தில் இறக்கும் பக்தர்கள் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய், காயம் அடைந்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். மாரடைப்பு உள்ளிட்ட நோய்களில் இறப்பவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் 30 ஆயிரம், வெளி மாநிலத்தவராக இருந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.அண்மையில் ஒரு விபத்தில் இறந்தவர் உடலை தமிழகத்தில் கொண்டு சென்ற போது அவரது குடும்பத்தார் மற்றும் ஊர் மக்கள் உடலுடன் சென்ற ஐயப்பா சேவா சங்க தொண்டர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் இனி மரணம் ஏற்படும் போது அந்த நபரின் முகவரிக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லப்பட்டு, அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். இது தொடர்பாக அந்த மாவட்ட கலெக்டருக்கும் தகவல் சொல்லப்படும். சபரிமலைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குன்னாறு அணை உயரத்தை இரண்டரை மீட்டர் அதிகரித்தால் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறப்படும். பம்பை நதியை சுத்தமாக பராமரிக்க தேவசம்போர்டு தயாராக உள்ளது. வரும் மகரவிளக்கு காலத்தில் பெருவழிப்பாதையில் தேவையான மின்விளக்குகள் அமைக்கவும், பக்தர்களுக்கு குடிநீர் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மகரவிளக்கு சீசன் முடிந்ததும், மாதா அமிர்தானந்தமயி மடம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் சன்னிதானம் மற்றும் பம்பையில் குவியும் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும். பக்தர்கள் இருமுடி கட்டுகளில் பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.