பதிவு செய்த நாள்
18
டிச
2015
02:12
சபரிமலை,: சபரிமலை மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகளை இணைத்து கிரேட் சபரிமலை டெவலப்மென்ட் அதாரிட்டி உருவாக்க வேண்டும், என கொச்சிக்கு வந்த பிரதமர் மோடியிடம், ஐயப்பா சேவா சமாஜம் மனு அளித்தது.கொச்சியில் இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் என். ராஜன் (ஈரோடு), இந்து ஐக்கிய வேதி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் மோடியை சந்தித்து மனு கொடுத்தனர்.அதில் கூறியுள்ளதாவது: 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பக்தர்கள் வரும் சபரிமலையை, தேசிய வழிபாடு மையமாக அறிவிக்க வேண்டும். சபரிமலை மேம்பாட்டுக்கு தேவையான நிலங்களை வனத்துறை கொடுக்க வேண்டும்.கங்கை நதியை போல பம்பை நதியையும் பாதுகாக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் துறைகளை இணைத்து கிரேட் சபரிமலை டெவலப்மென்ட் அதாரிட்டி அமைப்பை உருவாக்க வேண்டும்.சபரிமலைக்கு தேவையான மின்சாரத்தை, சூரியஒளி, காற்றாலைகள் மூலம் பெற மத்திய அரசு உதவ வேண்டும். டிராக்டர்களில் பொருட்கள் கொண்டு வருவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க பம்பை-- சன்னிதானம் ரோப் கார் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து ராஜன் கூறுகையில், சபரிமலைக்கு ௧,௦௦௦ கோடி ரூபாய் தரவேண்டும் என கேட்டோம். அதற்கு மோடி, எத்தனை கோடி ரூபாய் வேண்டுமானாலும் தரலாம்; ஆனால் அதற்கு செயல்திட்டம் வேண்டும், என தெரிவித்தார். இது தொடர்பாக நிர்வாகிகளை டில்லிக்கு வருமாறு அழைத்துள்ளார், என்றார்.