மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளியம்பல நடராஜர் தவிர பிரகாரத்தில் மேலும் நான்கு நடராஜ சபைகள் உள்ளன. திருவாலங்காடு, திருநெல்வேலி, சிதம்பரம், குற்றாலம் ஆகிய கோயில்களில் அருளும் நடராஜர் வடிவங்கள் இங்குள்ளன. ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரையின்போது இவர்கள் நால்வரும் நூற்றுக்கால் மண்டபத்திலுள்ள நடராஜர் சன்னிதிக்கு எழுந்தருள்கின்றனர். தமிழகத்தின் பஞ்சசபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். இவர் பத்துக்கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். வெள்ளியம்பலம் பெயருக்கேற்ப முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். வெள்ளியம்பல நடராஜருக்கு சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. அபிஷேகம் செய்வதில்லை. உற்சவருக்கு சந்தனாதி தைலத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம். இங்கு நடராஜர் வலது திருவடி உயர்ந்து ஆடுவது தனிச்சிறப்பு!