பதிவு செய்த நாள்
24
டிச
2015
11:12
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே, கோவில் திருப்பணி தடைபடாமல் இருக்க அஸ்திரயாகம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தேசூர் ரேணுகாம்பாள் கோவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இப்பகுதி மக்கள் எந்த காரியத்தை துவங்கினாலும், ரேணுகாம்பாளை வழிபட்டு அதன்பின்னர் தான் பணியை துவங்குவர். இந்த கோவில் தற்போது சிதிலமடைந்துள்து. அதனால் முக்கிய நாளில் மட்டும் அம்மனுக்கு பூஜை செய்யப்படுகிறது. மற்ற நாளில் கோவில் மூடப்பட்டிருக்கும். கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பணி துவங்கினால், ஏதாவது ஒரு காரணத்தினால் தடை பட்டு வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சி, ஊர் மக்கள் ஒன்று கூடி, கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியே ஆக வேண்டும் என, முடிவு செய்தனர். கோவில் திருப்பணி தடை படாமல் இருக்க வேண்டி, ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி, கடந்த, 21ம் தேதி அஸ்திரயாகம் பரிகார பூஜை நடத்தினர். தொடர்ந்து கோவில் புதுப்பிக்கும் பணியை துவங்க, வரும் ஜனவரி, 21ம் தேதி பாலாலயம் செய்யும் நிகழ்ச்சியும், 26ம் தேதி வாஸ்து பூஜையும் செய்ய முடிவு செய்துள்ளனர்.