கொடைக்கானல், : கொடைக்கானலில் மும்மதத்தினரும் வழிபடும் தலமாக சலேத் அன்னை ஆலயம் திகழ்கிறது.இந்த ஆலயம் 2016, ஆகஸ்டில் தனது 150ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ளது. ஆண்டுதோறும் ஆக.,14ல் சலேத் அன்னை திருஉருவ சிலை அலங்கரிக்கப்பட்டு சப்பர பவனி யாக நகரில் எடுத்துச் செல்லப்படுகிறது. லூயிஸ்ட் சீர் அடிகளார் தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து நலம் பெற்றதன் நினைவாக கொடைக்கானல் மலையில் ஆலயம் எழுப்ப விரும்பினார். அவரை போன்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கவுண்டஸ் டிவோட்ரிமோன்ட் என்ற பெண், தனது மகள் குணம் பெற்றதால் நன்றி செலுத்தும் வகையில், லூயிஸ் சான்ட் அடிகளாரிடம் மலையில் ஆலயம் அமைக்க நிதி உதவி செய்தார்.
ஆலய பணியானது 1863 ல் துவங்கி 1866ல் நிறைவுப்பெற்றது. 1883ல் ஆலயத்தின் முன்கூடம் அமைக்கப் பட்டது. 1884 -1885 ஆண்டுகளில் ஆலயத்தின் பக்கவாட்டில் 5 மீட்டர் நீட்டப்பட்டு அதன் முகப்பில் சிலுவை வைக்கப்பட்டது. மேலும் சதுரமணி கோபுரமும் எழுப்பப்பட்டது. சலேத் அன்னையின் உருவச்சிலையும், சூசையப்பர் உருவச்சிலையும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிரேநோபிள் ஆயரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இங்குள்ள சிலுவைப்பாதை படங்கள் இத்தாலி நாட்டு மறைப்பணியாளர் ஒருவரால் வரையப்பட்டவை. கண்ணாடி ஜன்னல்களில் வண்ணச் சித்திரங்களை தீட்டியவர் போங்கிலேர் என்னும் பிரெஞ்சு பெண்ணின் மகள். 1999ல் சதுரமணிக்கான பணிகளுக்கு பேபி ஜோசப் குடும்பத்தினர் உதவி புரிந்தனர். பல்வேறு புராதன சிறப்புகளுடன் திகழும் ஆலயத்தை உருவாக்கிய லூயிஸ் சான்ட் சீர் அடிகள் 1887, ஜனவரியில் இறந்தார். அவரது உடல் ஆலய முகப்பில் புதைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வேலைக்காக குடியேறிய கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் ஆலயத்தை விரிவுபடுத்த பாதிரியார் பார்த்தே என்பவரால் 1910, மேயில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1911ல் இருதய ஆண்டவர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது பாதிரியார் ஜெரோம் எரேனிமுஸ், உதவி பாதிரியார் தினகரன் ஆகியோர் ஆலய பணிகளை நடத்தி வருகின்றனர். சர்வ சமயத்தினரும் வழிபடும் தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது.