பதிவு செய்த நாள்
02
ஜன
2016
01:01
திருத்தணி:புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்காக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலில் குவிந்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், 150 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. பின், மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
மலைக்கோவிலில், ஜன., 1, அதிகாலை முதல், இரவு 9:00 மணி வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், ஐந்து மணிநேரத்திற்கு மேல், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை, 150 ரூபாயாக, கோவில் நிர்வாகம் விற்பனை செய்தது. சில ஊழியர்கள், ரசீதும் கொடுக்காமல், பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது.