பதிவு செய்த நாள்
02
ஜன
2016
03:01
திருப்புத்தூர்: புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர். ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு
இக்கோயிலில் நேற்று காலையிலேயே பக்தர்கள் வரிசை கோயில்,கோயில் அமைந்துள்ள
மலைக்குன்றைச் சுற்றி காணப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு,
மூலவர் தங்கக் கவசத்திலும், மூலவர் சன்னதிக்கு அருகில் உற்சவர் வெள்ளி மூஷிக
வாகனத்தில் எழுந்தருளியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பக்தர்கள் தொடர்ந்து தீபாராதனையுடன் சாமி தரிசனம் செய்தனர். எஸ்.பி.ஜியாவுல் ஹக்
தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திருப்புத்தூர்,காரைக்குடி,
பொன்னமராவதி,கல்லல் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயங்கின.
திருப்புத்தூர்: திருப்புத்தூர் கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு
பிரார்த்தனை நடந்தது. தூய அமல அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு
நன்றி வழிபாடுடன் புத்தாண்டு வழிபாட்டை அருட்தந்தை ஜெகனாதன் துவக்கினார். தொடர்ந்து
இரவு 11.50 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசிர்வாதமும், அடுத்து புத்தாண்டு திருப்பலியும்
நடந்தது.
இரக்கத்தின் ஆண்டு என்பதால் இரக்கத்தின் ஆண்டவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். டி.இ.எல்.சி. ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நேற்று முன்தினம் மாலை பாவமன்னிப்பு ஆராதனையுடன் இரவு 11 மணிக்கு துதி வழிபாடும், இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு ஆராதனையும் சபைகுரு ஆண்ட்ரூ அலெக்ஸ் நடத்தினார்.
*மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. ஆனந்தவல்லிசோமநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு
காட்சியளித்தார்.ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
*இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு
பிரார்த்தனை நடந்தது.பாதிரியார் ரெமிஜியஸ் சிறப்பு பிரார்த்தனையை நடத்தி வைத்தார்.
ஏராளமான பொதுமக்கள் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.நேற்றைய தினம் மாதத்தின் முதல்
வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.இந்த மாதம் புத்தாண்டு பிறப்பதால் வரும் 8ம் தேதி முதல் வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் எனபங்குதந்தை ரெமிஜியஸ் தெரிவித்தார்.
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், நேற்று அதிகாலை 5 மணிக்கு
நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயில், ராஜேந்திர சோளீஸ்வரர் கோயில், மதன வேணுகோபால பெருமாள் கோயில்,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்,பூஜை நடந்தது.
இளையான்குடி உலக மீட்பர் ஆலயத்தில் பங்கு பாதிரியார் அருள் ஆனந்த்
தலைமையிலும்,குண்டுகுளம் பங்கு திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பாதிரியார் மைக்கேல் பிரிட்டோ தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.சாலைக்கிராமம் புனித சகாயமாதா ஆலயம்,கரும்புகூட்டம் புனித சந்தியாகப்பர் ஆலயம், வில்லிசேரி புனித செபஸ்தியார் ஆலயம், சாத்தமங்கலம் புனித சகாய மாதா ஆலயம், சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலயம் உட்பட இளையான்குடி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிங்கம்புணரி கோயில்களில் பக்தர் கூட்டம்
அதிகம் காணப்பட்டது.சேவுகப்பெருமாள்அய்யனார் கோயிலில் அதிகாலை சிறப்பு அபிஷேக
ஆராதனை நடந்தது. மூலவர் பூரணை தேவி,புஷ்கலா தேவி சமேத சேவுகப் பெருமாள் அய்யனார் சுவாமி வெள்ளி அங்கியிலும் விநாயகர், வள்ளி தெய்வானை சமேதமுருகன்,பரிவார தெய்வங்கள் சந்தனகாப்பு அலங்கரத்தில் அருள்பாலித்தனர்.
சித்தர் முத்து வடுகநாதர்கோயிலில் சிறப்பு பூஜை,ஆராதனை நடந்தது.சித்தர் சிறப்பு
அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில்,சீரணிஅரங்கு ஐயப்பன் கோயில், பதினெட்டுப்படி ஐயப்பன் கோயில், செல்வ விநாயகர் கோயில், நாடார் பேட்டை பத்திரகாளியம்மன், சுந்தரம் நகர் சுகம் தரும் விநாயகர் கோயில், சந்திவீரன் கூடம் சந்தி விநாயகர்,வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர்.
காளையார்கோவில்: காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் பாதிரியார் அற்புத
அரசு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆண்டிச்சிஊரணியில் புனித அடைக்கல மாதா ஆலயத்தில் பாதிரியார் பாஸ்கர் டேவிட் தலைமையில் சிறப்பு திருப்பலி, சூசையப்பர் பட்டினத்தில் புனித சூசையப்பர் ஆலயத்தில் பாதிரியார் எட்வின் அருள்ராபின் தலைமையில் சிறப்பு திருப்பலி, பள்ளித்தம்மத்தில் புனித மூவரசர் ஆலயத்தில் போஸ்கோ மையம் பாதிரியார் அண்ணாஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தேவகோட்டை: தேவகோட்டை சகாய அன்னை ஆலயத்தில் பாதிரியார் பாஸ்டின் தலைமையிலும், ராம்நகர் உலகமீட்பர் ஆலயத்தில் பாதிரியார் சந்தியாகு தலைமையிலும்,
சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் பாஸ்டர் துரைசிங் தலைமையிலும் சிறப்பு திருப்பலி
நடந்தது. சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், நகர சிவன்கோயில், புவனேஸ்வரி அம்மன்
கோயில், ஆதிசங்கரர் கோயில், மும்முடிநாதர் கோயில், கருதாவூரணி கைலாச விநாயகர்
கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடந்து சுவாமிகள் சிறப்பு
அலங்காரத்தில் காட்சியளித்தனர். நித்தியகல்யாணிபுரம் சவுபாக்யதுர்க்கையம்மன் கோயிலில் 108 அபிஷேகம் நடந்தது.