பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி கிரிவீதி, பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பழநியில் தைப்பூச விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. விபரம் வருமாறு: கலெக்டர்: தைப்பூசம் இவ்வாண்டு ஞாயிறு அன்று வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆகையால் அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் இல்லாதிருக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும். வெளியூர் பக்தர்கள் பாலிதீன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இணைஆணையர்: 67 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பாதயாத்திரை பக்தர்களுக்கு 20 ஆயிரம் ஒளிரும் குச்சிகள் வழங்கப்படும். ஜன.,27 வரை மலைக்கோயில் வழி ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்.
டி.எஸ்.பி., சண்முகசுந்தரம்: 2 எஸ்.பி., 20 டி.எஸ்.பி., என 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். "மப்டியில் ஒரு குழு கண்காணிப்பில் ஈடுபடுவர். கிரிவீதி உட்பட பல இடங்களில் சி.சி.டி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க 10 மெகாதிரை வைக்க உள்ளோம். சுகாதார துணை இயக்குனர் வரதராஜன்: சத்திரப்பட்டி முதல் பழநி வரை நடமாடும் மருத்துவ குழு அமைக்கப் பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி மற்றும் மலைக்கோயிலில் தனி மருத்துவக்குழு ஆம்புலன்சுடன் பணிபுரிவர். மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகர்: விழா நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். நகராட்சி தலைவர் வேலுமணி: அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். சேதமடைந்த ரோடுகளை பொதுநிதி ரூ.1.5கோடியில் செப்பனிடும் பணிநடக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் நாசர்: சிறப்பு ரயில்கள், கூடுதல்பெட்டிகள் இணைக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். எஸ்.பி., சரவணன்: பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்போது ஒட்டன்சத்திரம் ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்.வர்த்தகர்கள் வலியுறுத்தல்: வர்த்தகர் சங்கம் சார்பில் கவரவ தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் தலைமையில், "24 மணிநேரமும் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஏற்பாடு செய்யவேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.