பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
தமிழகத்தில் கோவில்கள் என்பது, வாழ்வோடு இணைந்த ஒன்று. காலம் காலமாக, ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற கருத்தை பலரும் கொண்டிருக்கின்றனர். மதம் சார்ந்த வாழ்வுடன் தொடர்புடையதாக கோவில்கள் கருதப்பட்டாலும், அது கலாசார, நாகரிக பண்பாட்டை பிரதிபலிக்கும் மையப் புள்ளியாக திகழ்ந்து வருகின்றன. மேனாட்டு கலாசார தாக்கங்கள் நிகழ்ந்த காலங்களிலும், தமிழகத்தில் கோவில் வழிபாடு, அதன் நடைமுறைகளை பேணிக் காக்கப்பட்டிருக்கின்றன. தற்போது கோவில்கள் பலவும், இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ளன. அதில் சில, பரம்பரை அறங்காவலர்கள் கொண்ட கோவில்கள்; தனியார் கோவில்கள் என்பது மிகவும் குறைவு. நித்திய செயல்பாடுகள், வழிபடும் முறை என, பல வேறுபாடுகள் இவற்றில் உண்டு.பாண்டிய, சோழ, சேர, மன்னர்கள் வெற்றி பெற்றதன் அடையாளமாக, கோவில்களை புதுக்கி, அதில் அதிகளவு கலாசார பிரதிபலிப்பை உருவாக்குவதை நடைமுறையாக கொண்டிருந்தனர்.
மக்கள் தொகை அதிகரிப்பாலும், சுற்றுலாப் பயணிகள் வருகையும், கோவில்களில் கூட்டம் அதிகரிக்கிறது. மக்கள் நடுவே, பக்தி பெருகியதாக காட்சியளிப்பதன் அடையாளமாக, சில விசேஷ நாட்களில், கோவில்களில் கட்டுக்கடங்காத கூட்டமும் இருக்கிறது. அதே சமயம், மிகவும் புராதனமான கோவில்கள் பலவற்றில், வழிபாட்டு நடைமுறைச் செலவினங்களுக்கும் சிரமப்படுகிற சூழ்நிலை உள்ளது. தமிழக இந்து அறநிலையத்துறை சட்ட திட்டங்களும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரள சட்ட திட்டங்களும் ஒரே மாதிரி இல்லை. இதை மாற்றி ஒன்றாக்க வேண்டும் என்பது பிரச்னை அல்ல. புத்தாண்டு நாள் முதல் கோவில்களுக்கு வழிபட வரும் பக்தர்கள், பாரம்பரிய உடையில் வரவேண்டும் என்ற ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்திருக்கிறது. இதனால், பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில், லெக்கிங்ஸ், டீ - ஷர்ட்டுகளில் வர இயலாது; ஆண்களும் ஜீன்ஸ், டிரவுசருடன் வர இயலாது. அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கை, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திய செயலாகும். அதே சமயம், தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் அப்பீல் மனு, மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஆகவே, இந்த கெடுபிடி தானாக குறையலாம். கோவில்களுக்கு மன்னர்கள் வழங்கிய மானியம் அல்லது அதற்கென உள்ள சொத்துகள் இன்று இல்லை. நீர்நிலை அமைப்புகளுக்கு ஆன கதி, அவற்றுக்கும் ஏற்பட்டதை ஏற்றுப் பழகி விட்டோம். இப்போது அரசியல்வாதிகள் உட்பட பலரும், குடும்பத்துடன் வந்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர். நாத்திகம் பேசுவதற்கும், கோவில் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை என்பதையும் காண்கிறோம். ஆனால், ஆடைக்கட்டுப்பாடு எதற்கு? மனம் துாய்மையாக இருக்க விரும்பி வழிபாடு செய்ய வருவோரை, கட்டுக்குள் வைப்பதா என்ற கேள்வி எழுகிறது. பெண்களின் கவுரவம் காக்கும் ஆடை எது என்பதை, மற்றவர்கள் கையில் எடுப்பதா, அது சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்கும் செயல் என்ற வாதமும் எழுந்துள்ளது. ஜாதி வேறுபாடுகள், மற்ற வேறுபாடுகளால் ஏற்படும் பிரிவினைகள் அதிகம் ஏற்படாத இடமாக கோவில்கள் உள்ளன. மிகப்பெரும் கோவில்களில் ஆளில்லாத மண்டபங்கள் மற்றும் திறந்த வெளிப்பகுதி, இளம் காதலர் அல்லது தம்பதியர் இயல்பாக பேசிக் கழிக்கும் பொது இடமாகவும் மாறி வருகிறது. அத்துடன், மதியம் இலவச உணவு தரும் கேந்திரமாகவும் மாறி விட்டது. சைவத் திருமறை நால்வர், ஆழ்வார்கள் பரப்பிய தெய்வத்தமிழ் குறைந்து, மனத்துாய்மைக்கு இடமாக தொடர முடியாமல், வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா மையம் போல, கோவில்கள் மாறி வருகின்றன. மனத்துாய்மை போதும் என்ற கருத்தை வலியுறுத்தினால், அது ஒழுக்கத்துடன் இயைந்த வாழ்வுக்கு முக்கியத்துவம் தருவதன் அடையாளமாகும். ஆடைக்கட்டுப்பாடு மட்டும் அல்ல, கோவில்களின் கலாசார பெருமைகளை மீட்க, வெற்றுக் கூச்சல் நிறைந்த விவாதங்கள் போதுமா என்பதையும் அலச வேண்டும். சமயம், வரலாறு, கலாசாரம், கலை நேர்த்தி ஆகிய அனைத்தும் கொண்ட பொக்கிஷங்கள், இன்று மீட்டெடுக்கப்படுமா என்பதே கேள்வியாகும்.