பதிவு செய்த நாள்
08
ஜன
2016
12:01
ஒட்டன்சத்திரம்:பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இளைப்பாற வசதியாக, ஒட்டன்சத்திரத்ததை சுற்றி உள்ள பல இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழநியில் நடைபெறும் தைப்பூச விழாவில் கலந்து கொள்ளவதற்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக செல்வர். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வடமதுரை, வேடசந்தூர் வழியாகவும், காரைக்குடி பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் நத்தம், திண்டுக்கல் வழியாகவும், மதுரை , தேனி மாவடங்களில் இருந்து வரும் பக்தர்கள் செம்பட்டி வழியாகவும் சென்று ஒட்டன்சத்திரத்தை அடைவர். இவர்கள் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்கு ஒரே வழியில்தான் செல்ல வேண்டும். இதனால் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநி வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இவர்கள் இளைப்பாற வசதியாக ஆண்டுதோறும் பழநி தேவஸ்தானம் சார்பில் பல இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். தைப்பூசம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. தற்போது பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் இளைப்பாற வசதியாக ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில், போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலக வளாகம்,குழந்தை வேலப்பர் கோயில் உட்பட இன்னும் பல இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.