கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க, அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, பத்தணம்திட்டா மாவட்ட கலெக்டர் ஹரிகிஷோர், ’மிஷன் கிரீன் சபரிமலா’ என்ற திட்டத்தை துவக்கி, சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதித்து, பக்தர்கள் ஒத்துழைப்பு தரும்படி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: சபரிமலைக்கு வரும் பக்தர்கள், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் டப்பாக்கள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு பதில் சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு, பக்தர்கள் பூரண ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு ஹரிகிஷோர் கூறினார்.