பதிவு செய்த நாள்
16
ஜன
2016
11:01
சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர்.சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச., 30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக (ஜன., 15) மகரவிளக்கு பெருவிழா நடந்தது. காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை 11.00 மணிக்கு நிறுத்தப்பட்டது. கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு உச்சபூஜை நடந்தது. தொடர்ந்து மகரசங்கரம பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் நடந்தன.
மாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் கோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து கடந்த 13ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி (ஜன., 15) மாலை 5.40 மணிக்கு சரங்குத்தி வந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின், அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.35 மணிக்கு சன்னிதானம் வந்தது.
பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18- படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. கோயில் முன் திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து 6.45-க்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தன.
தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புல்மேட்டில் மகர ஜோதி தரிசனத்துக்கு பின்னர் ஏற்பட்ட விபத்தில், 102 பேர் இறந்ததால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. விபத்துக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கேரள அரசு போக்குவரத்துக்கழகம் ஆயிரம் பஸ்களை தயார் நிலையில் நிறுத்தியிருந்தது.