பதிவு செய்த நாள்
16
ஜன
2016
01:01
திருப்பூர்: "கடவுளை வழிபடுவதும், பசுக்களை வழிபடுவதும் ஒன்றே; இறைவனின் வடிவமாக, பசுக்கள் இருக்கின்றன, என, சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசினார்.
துத்தாரிபாளையம் கே.எஸ்.கே., பவுன்டேசன், தமிழ்செல்வன் நினைவு அறக்கட்டளை சார்பில், கொடுவாய் வஞ்சிபாளையம் பிரிவில் உள்ள பாரதியார் குருகுல வளாகத்தில் மக்கள் நலன், அமைதி வேண்டி விநாயகர் வேள்வி, உலகநல வேள்வி, 27 நட்சத்திர மகா யாகம் மற்றும் கோமாதா பூஜை, நவசக்திவேள்வி, ஜல்லிக்கட்டு பொங்கல் மற்றும் திருவிளக்கு பூஜை (ஜன.,15)நடத்தப்பட்டது.
கோவை காமாட்சிபுரி ஆதினம் அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சாக்த ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமி தலைமையில் வேள்வி பூஜைநடத்தப்பட்டது. அவர் பேசுகையில், ""கடவுளை வழிபடுவதும், பசுக்களை வழிபடுவதும் ஒன்றே; இறைவனின் வடிவமாக, பசுக்கள் இருக்கின்றன. ஒரே இடத்தில், 27 பசுக்களை பார்ப்பது மிகப்பெரிய புண்ணியம். பசு ஹோமியம் மிக உயர்வானது எனில், அதை தரும் பசுக்கள் பன்மடங்கு புனிதமானவை. கோவில்களுக்கு நல்ல முறையில் ஆடை உடுத்தி வருவது நமது கலாசாரம்; கோர்ட் அறிவுறுத்தும் அளவுக்கு, உடை கலாசாரம் சீரழிந்து விட்டது, என்றார். இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் கிஷோர் குமார், கே.எஸ்.கே., பவுன்டேசன் தலைவர் சம்பத்குமார், தமிழ்செல்வன் அறக்கட்டளை உறுப்பினர் லட்சுமியம்மாள் முன்னிலை வகித்தனர். சினிமா இயக்குனர் சந்தானபாரதி, கட்சி சார்பற்றவிவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி பங்கேற்றனர். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் சாவித்திரி முன்னிலையில், திருவிளக்கு பூஜை நடந்தது.