பதிவு செய்த நாள்
12
ஆக
2011
11:08
குருவாயூர்:பழங்காலம் தொட்டு நடந்து வரும் குத்து விளக்குகள் சமர்பிக்கும் நிகழ்ச்சி, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், வரும் 17ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சியில், பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 151 குத்து விளக்குகள் சமர்ப்பிக்க உள்ளனர்.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பழங்காலம் தொட்டே, சில குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆவணி மாதம் முதல் தேதியன்று, சுவாமிக்கு குத்து விளக்குகள் சமர்ப்பிப்பது வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான நிகழ்ச்சி, வரும் 17ம் தேதி கோவிலில் நடக்கிறது.கோவில் கிழக்கு சன்னிதியில், கொடி மரத்திற்கு அருகே துவங்கி திருமண மண்டபம் வரை, இந்நிகழ்ச்சிக்காக மாவுக்கோலம் வரையப்பட்டு, அதில் அரிசி போன்ற தானியங்களை அளக்க பயன்படும் படி (பறா) போன்ற பொருட்களில் நெற்களை கொட்டியும், தென்னம்பூக்களால் அலங்கரித்தும் வைக்கப்படும்.அவற்றில் 151 குத்துவிளக்குகள் வைக்கப்பட்டு, தீபாராதனை நேரத்தின்போது, அவைகளில் தீபமேற்றப்படும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குத்து விளக்கு கொண்டு வர முடியாத நிலை இருப்பின், அதற்கான பணத்தை முன்னரே தேவஸ்தான அலுவலகத்தில் செலுத்தினால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.