பதிவு செய்த நாள்
16
ஜன
2016
02:01
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பழநிக்கு பாதயாத்திரையாக
செல்லும் யாத்ரீகர்கள், மாலை அணிந்து, தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக, (ஜன.,15)புறப்பட்டுச் சென்றனர்.
ஆண்டு தோறும் மார்கழி மாதம், மாலை அணிந்து விரதம் இருந்து, முதல் நாளில் கால்நடையாக பழநிக்கு யாத்திரீகர்கள் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு புறப்பட்டுச் செல்லும் யாத்ரீகர்கள், மூன்று நாள், ஐந்து நாட்களில், பழநியை அடைந்து, ஸ்வாமியை தரிசனம் செய்து வீடு திரும்புவர். அதன்படி, தை முதல் நாளான நேற்று, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, சீராப்பள்ளி, பேளுக்குறிச்சி, ஆர்.புதுப்பட்டி, வடுகம், மோகனூர், லத்துவாடி, வையப்பமலை, எலச்சிப்பாளையம், திருச்செங்கோடு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.
இது குறித்து, யாத்ரீகர்கள் சிலர் கூறியதாவது: குடும்ப பிரச்னை, திருமணத்தடை, குழந்தை
பாக்கியம், கடன் பிரச்னை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்
என்பதற்காக, சுவாமிக்கு வேண்டுதல் வைத்து, பழநிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர்.
அவ்வாறு கோரிக்கை நிறைவேறியதும், சுவாமிக்கு தங்களால் இயன்றதை செலுத்துகின்றனர்.
மேலும், கோரிக்கை நிறைவேறினால், பாதயாத்திரையாக பழநிக்கு வருவதாகவும் பலர்
வேண்டுகின்றனர். அதன்படியும், தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். பழநிக்கு
பாதயாத்திரை செல்லும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.