பதிவு செய்த நாள்
16
ஜன
2016
02:01
வில்லியனுாரில் பல நுாற்றாண்டுகள் கண்ட பழம் பெருமை வாய்ந்த புண்ணிய ஸ்தலமாக,
கோகிலாம் பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
11ம் நுாற்றாண்டில் தருமபால சோழனால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வந்து, பக்தியோடு
இறைவனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும், திருமண தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம், மாணவர்களுக்கு தடையின்றி கல்வி கிடைக்கும், விவசாயம் சிறப்பாக செழிக்கும், தொழில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
இதனால், பிரதோஷ காலம் மட்டுமின்றி எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சுக பிரவசம் வேண்டி கர்ப்பிணி பெண்கள் வணங்கும் பிரசவ நந்தி இக்கோவிலில் இருப்பது தனிச் சிறப்பாகும்.
தாய்மார்கள் பேறு காலத்தில் சுக பிரசவம் நடக்க வேண்டி, கோவில் உள்பிரகாரத்தில்
கோகிலாம்பிகை சன்னதிக்கு முன் உள்ள பிரசவ நந்திக்கு நிறைமாத கர்ப்பிணி தாய்மார்கள்
பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு பூஜை செய்து வணங்குகின்றனர்.
பின்,வடக்கு பார்த்த முகமாக உள்ள நந்தியை, தெற்கு பார்த்த முகமாக திருப்பி வைத்துவிட்டு
செல்வர். அப்படி செய்தால், கண்டிப்பாக சுகபிரசவம் ஆகும் என்கின்றனர்.
சுகப்பிரசவம் நடந்த பிறகு மீண்டும் தெற்கு பகுதி பார்த்த பிரசவ நந்தியை பூஜை செய்து பழைய படியே கோகிலாம்பிகை சுவாமியை பார்க்கும் வகையில் வடக்கு நோக்கி திசைமாற்றி
வைக்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க பிரசவ நந்தியை வணங்க தமிழகம் மற்றும் புதுச்சேரி மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில தாய்மார்களும் பேறுகாலத்தில் தங்களுக்கு சுகபிரசவம் நடக்க வேண்டுமென திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு வந்து பிரசவ நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலில் வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.