புதுச்சேரி: ஆரோவில் அருகே நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வெளிநாட்டவர் அதிகம் வாழும் ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம் மந்தவெளி திடலில், காணும் பொங்கலை முன்னிட்டு, மஞ்சு விரட்டு நேற்று நடந்தது. ஆரோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளுடன் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாடுகள் சீறி பாய்ந்த போது நிலத்தில் விளைந்த மா, புளி, வாழை போன்ற விளை பொருட்களை வீசி மகிழ்ந்தனர். ஆரோவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான புடவை, தாவணி அணிந்து கலந்து கொண்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்கள் கரும்பு, பொங்கல் வழங்கி காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். குயிலாப்பாளையத்தில் நடந்த சந்தையில் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.