திருச்செந்தூரில் பங்குனி உத்திரம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2026 10:04
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு வள்ளியம்மன் தவசு காட்சிக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இன்று பங்குனி உத்திரம் என்பதால் தென் மாவட்டத்தில் உள்ள ஏராளமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த பின்னரே செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மேலும் தென்காசி, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி எடுத்தும் வேல் குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.