பதிவு செய்த நாள்
12
ஆக
2011
11:08
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசுக்காட்சியில் "சங்கரரும், நாராயணரும் ஓன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் விதமாக சங்கரலிங்கசுவாமி அன்னையின் வேண்டுகோளை ஏற்று சங்கரநாராயணசுவாமியாக காட்சி கொடுத்தார். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு சங்கரலிங்கசுவாமி, கோமதிஅம்பாள் சமேதரராக இருந்து அருள் பாலித்து வருகிறார். முன்னொரு காலத்தில் சைவ மற்றும் வைணவ மக்களிடையே சிவன், விஷ்ணு ஆகிய இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. அப்போது இரு தரப்பைச் சேர்ந்த பக்தர்களிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. பக்தர்களிடையே ஏற்பட்ட பிரிவினையைக் கண்ட அன்னை கோமதி மனம் வருந்தினார். இதனால் சிவன், விஷ்ணு ஆகிய இருவரும் ஒன்று பக்தர்கள் அறியும் வண்ணம் விளக்க வேண்டும் அன்னை கோமதி, சுவாமியிடம் வேண்டினார். அப்போது புன்னை வனத்தில் தபசு இருந்தால் இருவரும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்குவதாக சுவாமி கூறினார். இதனால் அன்னை கோமதி புன்னை வனக்காட்டில் ஒற்றைக்காலில் "தபசு இருந்தார். இதனைத் தொடர்ந்து சங்கரலிங்கசுவாமி தனது உடலின் ஒரு பகுதியை சங்கரராகவும், மற்றொரு பகுதியை நாராயணராகவும் மாற்றி சங்கரநாராயணசுவாமியாக காட்சி கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சியே ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் "ஆடித்தபசு திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசுக்காட்சி ஆடி மாதம் பவுர்ணமி நாளில் நடக்கும்.
இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 7ம் திருநாளான 7ம் தேதி இரவில் அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் திருநாளான 9ம் தேதி தேரோட்டம் நடந்தது. விழாவின் 11ம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான "தபசுக்காட்சி நடந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி, அம்பாள், சந்திரமவுலீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கும் கும்பம் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 11.45 மணிக்கு தங்கச் சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளினார். பின்னர் ஊர்வலமாக தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு சுவாமியை காண வேண்டி அம்பாள் ஒற்றைக்காலில் தபசு இருந்தார். அப்போது அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணியளவில் கோயிலில் இருந்து சங்கரநாராயணசுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் புடை சூழ தெற்கு ரதவீதியில் உள்ள தபசு பந்தலுக்கு வந்து சேர்ந்தார். அப்போது மண்டபத்தில் தபசு இருந்த அம்பாள் தபசு பந்தலுக்கு வந்தார். பின்னர் சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் பட்டு, பரிவட்டம், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சரியாக 6.27 மணிக்கு அம்பாளுக்கும், பக்தர்களுக்கும் சங்கரநாராயணசுவாமி காட்சி கொடுத்தார். அப்போது கருடன் வட்டமிட்டது. உடனே பக்தர்கள் சங்கரா, நாராயணா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் பக்தர்கள் தங்கள் நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல், காய்கறிகளை சுவாமி, அம்பாள் சப்பரங்களின் மீது வீசினர். தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சங்கரநாராயணசுவாமியாக காட்சி கொடுத்த சுவாமி மீண்டும் சங்கரலிங்கசுவாமியாக காட்சி கொடுக்க வேண்டி அம்பாள் தபசு மண்டபத்தில் தபசு இருந்தார். இதனால் சங்கரநாராயணசுவாமி பக்தர்களின் புடைசூழ கோயிலுக்கு வந்து சேர்ந்தார். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் சங்கரநாராயணசுவாமி யானை வாகனத்தில் சங்கரலிங்கசுவாமியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.