பதிவு செய்த நாள்
18
ஜன
2016
11:01
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே கீழக்கோயில்பட்டி கிராமத்தில் சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பூ எருவாட்டி திருவிழா நடந்தது.
வத்தலக்குண்டு அருகே 100 குடும்பங்கள் வசிக்கும் கீழக்கோயில்பட்டியில் பல ஆண்டுகளாக பூ எருவாட்டி திருவிழாவாக, சிறுவீட்டு பொங்கல் நடந்து வருகிறது.வாசலிலே பூசணிப் பூமார்கழி மாதத்தில் வாசலில் கோலமிட்டு பூசணி, பீர்க்கை, செம்பருத்தி, எருக்கு பூக்களை சாண உருண்டையில் செருகி, கோலத்தின் நடுவே பெண் வாரிசுகள் உள்ள வீடுகளில் வைக்கும் பழக்கம் உள்ளது. இப் பூ எருவாட்டிகளை மார்கழி மாதம் முழுவதும் சேமித்து வைப்பர்.பொங்கல் முடிந்த மூன்றாம் நாள் பூ எருவாட்டிகளை சேமித்து வைத்திருக்கும் பெண்கள் மேள, தாளத்துடன் அழைத்து வரப்படுகின்றனர். அனைவரும் ஒன்று கூடி கிராமக் கோயில் முன்பாக பூ எருவாட்டி தட்டுகளை வட்டமாக வைத்து கும்மி, தெம்மாங்கு பாட்டுப்பாடி மகிழ்கின்றனர். பின் பூ எருவாட்டி தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாகச் எடுத்துச்சென்று, அருகில் உள்ள மருதாநதியில் வெற்றிலையை வைத்து சூடமேற்றி குலவைச் சத்தத்துடன் நீரில் விடுகின்றனர். இது குறித்து கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கர்ணம் பொன்னம்பலம், 90, கூறுகையில்,“எங்களது தாத்தா காலத்தில் இருந்து பூ எருவாட்டி நிகழ்ச்சி நடந்து வருகிறது. பொங்கல் திருவிழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக முன்னோர்கள் இவ்வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன்” என்றார்.